ஜெ கடிதம் குறித்த கட்டுரை சர்ச்சை: வருத்தம் தெரிவிக்கிறார் மஹிந்த

படத்தின் காப்புரிமை defence lk
Image caption கட்டுரை விவகாரம்- வருத்தம் தெரிவித்தார் மஹிந்த

தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக மீனவர் பிரச்சினையில் எழுதும் கடிதங்களை, காதல் கடிதங்கள் என்று கிண்டலடித்து எழுதப்பட்ட பத்திரிக்கை கட்டுரை ஒன்றை இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைய தளம் மறு பிரசுரம் செய்தது குறித்து , இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

இன்று கொழும்பில் செய்தியாளர்கள் சந்திப்பொன்றில் ஜனாதிபதி இந்த விஷயம் தொடர்பாக வருத்தம் தெரிவித்தார்.

இது எப்படி நிகழ்ந்தது என்பது தொடர்ப்பாக ஆராயவுள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி இந்த சம்பவம் குறித்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் இணைய தளத்தில் வெளியான இந்தக் கட்டுரையை அடுத்து தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் பரப்பரப்பு ஏற்பட்டது. அரசியல் கட்சிகள் இது குறித்து கடும் விமர்சனத்தை வெளியிட்டன.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட கட்டுரையை தனது இணைய தளத்திலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்ட பாதுகாப்பு அமைச்சு இது சம்பந்தமாக இந்திய அரசாங்கத்திடம் ஏற்கனவே மன்னிப்பு கோரியுள்ளது.

சம்பந்தப்பட்ட கட்டுரை பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றியே இணைய தளத்தில் பிரசுரிக்கப்பட்டதாக அந்த அமைச்சு சார்பில் பேசிய மேஜர் ஜெனரல் கப்பில ஹென்தாவிதாறன ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

ஆயினும் இந்தியாவில் இருக்கும் இலங்கை தூதுவரை அழைத்த இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்த கட்டுரை சம்பந்தமாக தனது அரசாங்கத்தின் எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.

இந்த பின்னியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது வருத்ததை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.