கன்னியா வெந்நீர் ஊற்று பிரதேசத்திற்கு வேறு பாதை: தமிழர்கள் விசனம்

Image caption சிங்களக் குடியேற்றங்களுக்காகவே புதிய பாதை அமைக்கப்படுவதாக உள்ளூராட்சித் தலைவர் சந்தேகிக்கின்றார்

இலங்கையின் கிழக்கே, திருகோணமலையில் வரலாற்றுச் சிறப்புமிக்க கன்னியா வெந்நீர் ஊற்று பகுதிக்கு செல்வதற்கு புதிதாக பாதையொன்று அமைக்கப்படுவது தொடர்பாக உள்ளூர் தமிழ் மக்கள் கவலையும் சந்தேகமும் அடைந்துள்ளனர்.

நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வரும் வழமையான பாதை மூடப்பட்டு புதிய பாதையொன்று அமைக்கப்படுவது கன்னியா வெந்நீர் ஊற்று பிரதேசத்தில் பெரும்பான்மை சமூக மக்களை குடியேற்றுவதற்கான முயற்சியாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேசத்திற்கான உள்ளுராட்சி சபைத் தலைவரான இராமலிங்கம் விஜேந்திரன் கூறுகின்றார்.

திருகோணமலை மாவட்ட இந்துக்கள் பெரும்பாலும் சமய மரபுகளின் படி இந்த தலத்திலேயே இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்கான அந்தியேட்டிக் கிரியைகளை செய்துவருகின்றனர்.

ஏழு வெந்நீர் ஊற்றுக் கிணறுகளைக் கொண்ட கன்னியா பகுதியில் இப்போது இந்து மத அடையாளங்கள் அருகி பௌத்த வழிபாட்டுக்குரிய அடையாளங்களே முன்னிலை படுத்தப்பட்டுவருவதாக இந்துக்கள் கூறுகின்றனர்.

Image caption கன்னியா வெந்நீரூற்று பகுதியில் இந்து மத அடையாளங்கள் அருகி விட்டதாகவும் விசனம்

ஏற்கனவே திருகோணமலை - அனுராதபுரம் நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து செல்லும் பாதை வழியாகவே கன்னியா வெந்நீர் ஊற்றுக்கான பொது போக்குவரத்து நடைபெறுகின்றது.

தற்போது அதற்கு பதிலாக அதே நெடுஞ்சாலையில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் சந்தா புர வீதி என புதிய பாதையொன்று அமைக்கப்பட்டு வருவதாக இராமலிங்கம் விஜேந்திரன் கூறுகின்றார்.

அந்த பாதையில் சுமார் 1000 ஏக்கர் பரப்புள்ள அரச காணிகள் இருப்பதாகவும் அவர் கூறுகின்றார்.

புதிய பாதை அமைப்பு வேலைகளை இராணுவமும் தொல்பொருள் ஆய்வுத் தினைக்களமும் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

பல ஆண்டுகளாக தமது உள்ளூராட்சி மன்ற்தின் பராமரிப்பிலிருந்த கன்னியா வெந்நீர் ஊற்றுப் பிரதேசம், 2010-ம் ஆண்டு தொல்பொருள் ஆய்வு மற்றும் வன பரிபாலனம் என்ற காரணங்களை கூறி, சபையின் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் விஜேந்திரன் சுட்டிக்காட்டுகின்றார்.