படுவான்கரையில் மோதல்: பொலிஸ் ஜீப் எரிப்பு - 11 பேர் காயம்

மோதலில் காயமடைந்த ஒருவர்
Image caption மோதலில் காயமடைந்த ஒருவர்

மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப் பிரதேசத்திலுள்ள பனையறுப்பான் கிராமத்தில் பொலிஸாருக்கும் கிராம மக்களுக்குமிடையிலான மோதலில் 7 பொலிஸாரும் 4 கிராமவாசிகளுமாக 9 பேர் காயமடைந்து மட்டக்களப்பு மற்றும் மகிழடித்தீவு அரசாங்க மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

காயமடைந்துள்ள கிராமவாசிகளில் தாயும் மகளுமாக இருவர், நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

சம்பவத்தின் போது பொலிஸ் வாகனமொன்றும் கிராமவாசிகள் சிலரால் தீ வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்கயைடுத்து அந்தக் கிராமத்தில் ஏற்பட்ட பதற்ற நிலையையடுத்து அங்கு விரைந்த இராணுவத்தினரால் நிலைமை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

தற்போது அந்த பகுதியில் பொலிஸாருடன் மேலதிகமாக இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப் படை பாதுகாப்புக்காக நிலை கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

'கள்ளச் சாராய விவகாரம்'

Image caption எரிக்கப்பட்ட பொலிஸ் ஜீப்

குறித்த கிராமத்திலுள்ள வீடொன்றில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்திலிருந்து சென்றிருந்த பொலிஸார் சந்தேக நபரான பெண்ணொருவரை கைது செய்து அழைத்து செல்ல முற்பட்ட போதே இந்த அமைதியின்மை ஏற்பட்டதாக காவல்துறையின் ஊடகப் பேச்சாளரான அஜித் ரோகண கூறுகின்றார்.

சந்தேக நபரான பெண்ணும் அவரது உறவினர்களுமே பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியதோடு, பொலிஸ் வாகனத்திற்கும் தீ வைத்ததாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன. செல்வராசா , பா. அரியநேத்திரன், மாகாண சபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார் மற்றும் இரா. துரைரெத்தினம் ஆகியோர் அந்தக் கிராமத்திற்கு நேரடியாகச் சென்று பொது மக்களளை சந்தித்து சம்பவம் தொடர்பாக கேட்டறிந்தனர்.

சம்பவத்தின் போது பொலிஸார் கிராம மக்கள் மீது தாக்குதல்களை நடத்தியதோடு துப்பாக்கிச் சூடும் நடத்தியதாக கிராம மக்களால் தனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்தாக அங்கு சென்று திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் குறிப்பிடுகின்றார்.

தாயும் மகளும் காயம்

Image caption பொலிஸாரால் முற்றுகையிடப்பட்ட வீடு

காயமடைந்த பெண்களில் ஒருவர் சந்தேக நபராக பொலிஸாரால் அழைத்து செல்லப்பட்டவர் என்றும் அடுத்தவர் அவரது மகள் என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

பொது மக்கள் மீதான பொலிஸாரின் துப்பாக்கிச் சூடு தொடர்பாக பக்கசார்பற்ற விசாரணை நடைபெற்று தொடர்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என மாகாண சபை உறுப்பினரான இரா.துரைரெத்தினம் கூறுகின்றார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பெண்களில் ஒருவர் 6 மாதங்களுக்கு முன்பு பொலிஸாரின் தாக்குதல் காரணமாக அரச மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்றிருந்தார் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

இதேவேளை பொலிஸார் மீதான தாக்குதல்கள் தொடர்பாக விசாரனைகளை மேற்கொண்டு வரும் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் பெண்கள் உட்பட கிராமவாசிகள் சிலர் தற்போது அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.