வட இலங்கை வறட்சி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வட இலங்கை வறட்சி - காணொளி

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக குடிநீருக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுவதாகப் பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

கிணறுகளும் குளங்களும் வற்றியிருப்பதனால், பிரதேச சபைகளின் ஊடாக பவுசர் வண்டிகளில் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

எனினும் பவுசர் வண்டிகள் மூலமாக வழங்கப்படுகின்ற நீர் தங்களின் தேவைகளுக்குப் போதுமானதாக இல்லையென்று வறட்சியினால் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

இதனால் அவர்கள் குடிநீர்ப் பற்றாக்குறையைப் போக்குவதற்காக குழாய்க் கிணறுகளைத் தேடிச்செல்ல நேர்ந்துள்ளது.

இன்னும் இரண்டு வாரங்களுக்கு இந்த நிலைமை நீடிக்குமேயானால் நிலைமை இன்னும் மோசடையும் என பலரும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் வறட்சியினால் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 75 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்குக்கு குடிநீர் வழங்குவதற்காக எட்டரை மில்லியன் ரூபா நிதியை அரசாங்கம் வழங்கியிருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

வட மாகாணத்தில் வறட்சியின் காரணமாக இரண்டரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் சுமார் ஐந்து லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 16.2 லட்சம் பேர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் வடபகுதி வறட்சி குறித்து செய்தியாளர் மாணிக்கவாசகம் அனுப்பிய காணொளியை இங்கு காணலாம்.