நவிபிள்ளை குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சு கண்டனம்

நவிபிள்ளை படத்தின் காப்புரிமை AP
Image caption நவிபிள்ளை

ஐநாமனித உரிமைக் கவுன்ஸிலின் பதவி விலகிச் செல்லுகின்ற ஆணையரான நவி பிள்ளை அவர்கள் தனது செவ்வி ஒன்றில், இலங்கையின் மனித உரிமை மீறல்களை ஆராய்வதற்கான ஐநாவின் விசாரணைகள் குறித்து கூறிய கருத்துக்கள் பற்றி இலங்கை வெளியுறவு அமைச்சு கண்டனம் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் நடந்ததாக்க் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து அங்கு செல்லாமலேயே ஐநா செயற்திறன் மிக்க விசாரணையை மேற்கொள்ள முடியும் என்று ஊடகம் ஒன்றுக்கான தனது செவ்வியில் நவி பிள்ளை கூறியிருந்தார்.

இந்த மாதத்துடன் பதவி விலகிச் செல்லுகின்ற ஐநா மனித உரிமைகள் ஆணையர், அண்மையில்தான் ஆரம்பமான ஒரு புலன்விசாரணை குறித்து இவ்வாறு கருத்துக் கூறுவது அவரது தனிப்பட்ட பரபட்சமான நடவடிக்கையை காண்பிக்கிறது என்று இலங்கை வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறுகின்றது.

இதன் மூலம் அந்த புலன்விசாரணை நடவடிக்கையில் அவர் செல்வாக்குச் செலுத்த விளைவதையும் அது குறிக்கிறது என்றும் இலங்கை கூறியுள்ளது.

இலங்கைக்கு வெளியே இருந்து கிடைக்கக் கூடிய தகவல்களை வைத்து இப்படியான விசாரணையை மேற்கொள்ள முடியும் என்று நவி பிள்ளை அவர்கள் கூறியிருப்பதாகக் கூறியுள்ள இலங்கை வெளியுறவு அமைச்சு, அத்தகைய தவல்களின் நம்பகத்தன்மை குறித்தும் தனது அறிக்கையில் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

மிகவும் உயர்வான தரத்தில் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய ஒரு அதிகாரியின் இப்படியான செயற்பாடு தமக்கு ஏமாற்றத்தை தருவதாகவும் இலங்கை கூறியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டு வருகின்ற சமூக பொருளாதார மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை புறந்தள்ளி, இலங்கை மீது சர்வதேச கவனத்தை குவிக்க அவர் தொடர்ச்சியாக முயற்சித்து வந்தார் என்றும் இலங்கை கூறுகிறது.

ஆகவே ஐநாவின் மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம், இலங்கையுடன், ஒத்துழைப்புடன், ஆக்கபூர்வமாகவும் , வெளிப்படைத்தன்மையுடன் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்றும் இலங்கை வெளியுறவு அமைச்சு அறிக்கை கோரியுள்ளது.