பாகிஸ்தானியர்களை திருப்பியனுப்ப இலங்கை நீதிமன்றம் தடை

Image caption இலங்கையில் சுமார் 1900 பேர் வரையான பாகிஸ்தானியர்கள் தஞ்சம்கோரி தங்கியுள்ளனர் (கோப்புப் படம்)

இலங்கையில் அரசியல் தஞ்சம்கோரி தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை சொந்த நாட்டுக்குத் திருப்பியனுப்பும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.

பாகிஸ்தானிலிருந்து இலங்கையில் அரசியல் தஞ்சம் கோரிவந்திருந்த பெண்ணொருவர் தன் சார்விலும் பூசா தடுப்பு முகாமில் உள்ள அவரது குடும்பத்தவர்கள் மூவர் சார்பிலும் தாக்கல் செய்திருந்த மனு தொடர்பிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தாம் பாகிஸ்தானுக்குத் திருப்பியனுப்பப்பட்டால் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அடிப்படையில் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்ததாக அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் லக்ஷான் டயஸ் கூறினார்.

அதன்படி, இந்த விவகாரத்தில் தீர்மானம் ஒன்று எடுக்கப்படும் வரை- ஆகஸ்ட் 29-ம் திகதி- பாகிஸ்தானியர்களை வௌியேற்றும் நடவடிக்கையை இடைநிறுத்தி வைப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

'இடைப்பட்ட காலத்தில் அரசாங்கமும் ஐநாவின் அகதிகளுக்கான நிறுவனமும் அரச சார்பற்ற நிறுவனங்களும் அகதிகள் தொடர்பில் நல்ல முடிவொன்றை எடுக்க அவகாசம் கிடைக்கும்' என்றார் லக்ஷான் டயஸ்.

'பாகிஸ்தானில் குறிப்பாக அகமதியா, ஷியா மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட இன, மதக் குழுக்களுக்கு பெரும்பான்மை சுன்னி சமூகத்தவர்களிடமிருந்தும் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளிடமிருந்தும் கடுமையான அச்சுறுத்தல்கள் உள்ளன' என்றும் அவர் கூறினார்.

'இலங்கைக்கு சர்வதேசக் கடப்பாடு உண்டு'

ஐநாவின் அகதிகளுக்கான நிறுவனத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மூன்றாவது நாடு ஒன்றில் தஞ்சம் கிடைக்கும் வரை இலங்கையில் தங்கியிருக்க வாய்ப்பு அளிக்குமாறு குறித்த பாகிஸ்தானியர்கள் அனுமதி கேட்டுள்ளனர்.

எனினும் ஐநாவின் அகதிகளுக்கான சாசனத்தில் கையெழுத்திடாத இலங்கைக்கு, பாகிஸ்தானியர்களை திருப்பியனுப்பாமல் வைத்திருக்க வேண்டிய கடமை இல்லை என்று இலங்கை அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல அண்மையில் கூறியிருந்தார்.

அனால், 'இலங்கை ஐநாவின்- சித்திரவதைகளுக்கு எதிரான உடன்பாட்டில் கைச்சாத்திட்டுள்ளது. அதில் ஒருவரது நாட்டில் சித்திரவதைகளுக்கு உள்ளான ஒருவரை அவரது நாட்டுக்கு அனுப்ப முடியாது என்கின்ற ஏற்பாடு இருக்கின்றது' என்று கூறினார் வழக்கறிஞர் டயஸ்.

சர்வதேச சட்ட நியமங்களின் படி, உயிர் அச்சுறுத்தல் உள்ள நாட்டுக்கு ஒருவரை திருப்பி அனுப்பாமல் இருக்கும் கடப்பாடு இலங்கைக்கு உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதுவரை 128 பேர் பாகிஸ்தானுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளதாகவும் இன்னும் 75 பேர் பூசா முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் லக்ஷான் டயஸ் கூறினார்.

இலங்கையில் தற்போது கிட்டத்தட்ட 1900 வரையான பாகிஸ்தானியர்கள் தஞ்சம்கோரி தங்கியிருப்பதாகவும் வழக்கறிஞர் லக்ஷான் டயஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.