'இந்திய மீனவர் குறித்து இராஜதந்திர மட்டத்தில் முடிவு எடுக்கப்படும்'

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர் ( ஆவணப்படம்)
Image caption கைது செய்யப்பட்ட இந்திய மீனவர் ( ஆவணப்படம்)

இலங்கைக் கடற்பரப்பினுள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கும் இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக எதிர்வரும் 29 ஆம் திகதி இராஜதந்திர மட்டத்தில் அதிகாரிகள் கலந்து கொண்டு புதுடில்லியில் பேச்சுக்கள் நடத்தவுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

அத்துடன் கடற்படையினரால், இலங்கைக் கடற்பரப்பினுள் வைத்து கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் மூலம் விடுதலை செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை விடுவிப்பது தொடர்பில் நீதிமன்றமே இறுதித் தீருமானம் எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களையும், படகுகளையும் இலங்கை அரசாங்கம் விடுதலை செய்யும் என்று இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்ற போதிலும், இந்திய மீனவர்கள் மாத்திரமே விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

படகுகளைக் கையளிப்பது என்ற பேச்சக்கே இப்போது இடமில்லை என்று இலங்கையின் மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்கள் தெரிவித்திருக்கின்றார். இந்த நிலலயில் உண்மையான நிலைமை என்ன என்று இலங்கைக் கடற்தொழில் அமைச்சின் ஊடகச் செயலர் நரீந்திர ராஜபக்ச அவர்களிடம் கேட்டபோது, இந்திய மீனவர்களின் படகுகள் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதால் நீதிமன்றமே அது தொடர்பில் முடிவை எடுக்கும் எனக் கூறினார்.

படத்தின் காப்புரிமை Reuters

''இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள 95 இந்திய மீனவர்களும் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். அவர்களுடைய 62 படகுகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன. இலங்கையின் சட்ட விதிகள் மற்றும் சர்வதேச கடற் சட்ட விதிகளுக்கமைவாக கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். அவர்களுடைய படகுகள் மற்றும் உபகரணங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. எனவே இந்திய மீனவர்களின் படகுகள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு வெளியில் தீர்மானங்களையோ முடிவுகளையோ எடுக்க முடியாது'' என்றார் இலங்கை அமைச்ச்pன் ஊடகச் செயலர் நரீந்திர ராஜபக்ச.

''இதேபோன்றுதான் தமிழ் நாட்டிலும் நடைபெற்றிருக்கின்றது. அங்கு கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். ஆனால் அவர்களுடைய 12 படகுகள் இன்னும் கையளிக்கப்படவில்லை. இதற்கு முன்னர் நீதிமன்ற நடவடிக்கை எதுவும் இல்லாமல் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களையும் படகுகளையும் தமிழ் நாட்டு அதிகாரிகள் விடுதலை செய்து வந்தார்கள். ஆனால் இப்போது தமிழ் நாட்டு கடற்பரப்பில் கைது செய்யப்படுகின்ற இலங்கை மீனவர்கள் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு, அதற்கு அமைவாக நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன'' என சுட்டிக்காட்டினார் இலங்கை கடற்தொழில் அமைச்சின் ஊடகச் செயலர் நரீந்திர ராஜபக்ச.

''தமிழ்நாட்டில் மட்டுமல்ல. ஆந்திரா ஒரிஸ்ஸா போன்ற இந்திய மாநிலங்களிலும் இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். அந்த மாநிலங்களின் சட்ட நடைமுறைகளுக்கு அமைவாக கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீதிமன்றத்தினால் விதிக்கப்படுகின்ற அபராதத்தைச் செலுத்திய பின்னர்தான் விடுதலை செய்யப்படுகின்றார்கள். எனவே, இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை என்பது பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாகவும் பல சிக்கல்களைக் கொண்டதாகவும் இருக்கின்றது. இத்தகைய பிரச்சினைகளுக்கு இரு நாடுகளினதும் இராஜதந்திர மட்டத்தில் ஒரு தீர்வைக் காண்பதற்காகவே, இரு நாட்டு அமைச்சுக்களையும் சேர்ந்த உயரதிகாரிகள் எதிர்வரும் 29 ஆம் திகதி புதுடில்லியில் சந்தித்துப் பேச்சுக்கள் நடத்தவுள்ளார்கள்'' என அமைச்சின் ஊடகச் செயலர் விளக்கமளித்தார்.