ததேகூ - இந்தியா பேச்சுவார்த்தை தொடர்பில் அமைச்சர் வாசு அதிருப்தி

படத்தின் காப்புரிமை lanintegmin.gov.lk
Image caption அமைச்சர் வாசுதேவ நாணயக்கார

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றமை தொடர்பில் அதிருப்தியடைந்துள்ளதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, இணக்கப்பாடு ஏற்படாத விடயங்களையும் இணக்கப்பாடு ஏற்பட்ட விடயங்களையும் குறித்துக் கொண்டு, இந்தியாவுடன் இலங்கை அரசாங்கமும் தமிழர் தரப்பும் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம் என்று தான் நான் கருதுவதாகவும் அமைச்சர் பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதியொருவரும் இந்தியாவுடனான பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருந்தால் மட்டுமே பேச்சுவார்த்தை முறையாக அமைய முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனியாகவும் இலங்கை அரசாங்கம் தனியாகவும் இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் நன்மைகளை எட்டமுடியாது என்றும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

குறைந்த பட்சம் ஏனைய மாகாணசபைகளில் தற்போது நடைமுறையில் இருக்கின்ற அதிகாரங்களையாவது வடக்கு மாகாணசபைக்கு அளிப்பதற்காக அரசாங்க தரப்பை இணங்கச் செய்யும் முயற்சிகளில் தாம் உள்ளிட்ட அரசாங்கத்திலுள்ள இடதுசாரித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் சமூக நல்லிணக்க அமைச்சர் பிபிசியிடம் கூறினார்.

வடக்கில் பாதுகாப்பு படைகளுக்காக காணிகள் கையகப்படுத்தப்படுவதையும் மக்களின் சிவில் வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படும் விதத்தில் இராணுவம் நிலைகொண்டிருப்பதையும் தடுப்பதற்காக தாம் உள்ளிட்ட சில தலைவர்கள் அரசாங்கத்தை இணங்கச் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.