யாழ்ப்பாணம் : நாளாந்தம் 40 பேருக்கு ''நாய்க்கடி'' சிகிச்சை

யாழ்ப்பாணத்தில் நாய்க்கடிக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு. படத்தின் காப்புரிமை Thinkstock
Image caption யாழ்ப்பாணத்தில் நாய்க்கடிக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

இலங்கையின் வடக்கே யாழ் மாவட்டத்தில் ''நாய்க்கடிக்கு'' உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதனால், அவர்களைக் கவனித்து சிகிச்சையளிப்பதற்கென விசேட பிரிவொன்று யாழ் போதனா வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாத்திரம் ''நாய்க்கடிக்கு'' உள்ளாகியவர்கள் நாளாந்தம் 40 பேர் சிகிச்சைக்கு வருவதாக அந்த வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் டாக்டர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா கூறுகின்றார்.

பொதுவாக ''நாய்க்கடிக்கு'' உள்ளாகி வருபவர்களுக்கு விபத்து பிரிவு விடுதியிலேயே சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. ஆனால், அங்கு விபத்துக்களில் காயமடைந்து வருபவர்களை முதலில் கவனிக்க வேண்டியிருப்பதனால் நாய்க்கடிக்கு உள்ளாகிய நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதில் தாமதம் ஏற்படுகின்றது. இதனைக் கருத்திற் கொண்டே அதற்கென தனியான பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக டாக்டர் சிறிபவானந்தரஜா தெரிவித்தார்.

நாய்களைக் கொல்ல தடை

இலங்கையில் தற்போதுள்ள அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் செயற்திட்டமாகிய மகிந்த சிந்தனை என்ற பல திட்டங்கள் அடங்கிய செயற்திட்டத்தின் கீழ் நாய்களைக் கொல்வது தடைசெய்யப்பட்டிருக்கின்றது. இதனால் நாய்களின் எண்ணிக்கை பெருகியிருக்கின்றது. பராமரிப்பற்று தெருவில் திரியும் நாய்களும் எண்ணிக்கையில் அதிகமாகி, நாய்களினால் கடிபடுவோர் அதிகரித்திருப்பதாக அவர் விளக்கமளித்தார்.

நாய்க்கடிக்கு உள்ளாகி வருபவரை தடுப்பூசி ஏற்றப்பட்ட நாய் கடித்ததா அல்லது தெருவில் பராமரிப்பற்ற நாய் கடித்ததா என்பதைக் கேட்டறிந்து அதற்கேற்ற வகையில் வைத்தியசாலயில் சிகிச்சையளிக்கப்படுகின்றது. விசர் நாய் அல்லது தெருவில் திரிகின்ற பராமரிப்பற்ற நாய் கடித்திருந்தால் நோயாளிக்கு நாய்கடிக்கு ஊசியும், பின்னர் தொடர்ந்து தடுப்பூசியும் ஏற்ற வேண்டியிருக்கும் என்று டாக்டர் பவானந்தராஜா கூறுகின்றார்.

முதலாம் நாள், மூன்றாம் நாள், பின்னர் 7 ஆம் நாள் 28 ஆம் நாள் என்று இந்தத் தடுப்பூசி தொடர்ச்சியாக குறிப்பிட்ட தினங்களில் நோயாளர்களுக்கு ஏற்றப்படுவதனால் அவர்களுக்குத் தொடர் சிசிச்சையும் கவனிப்பும் தேவைப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.