வவுனியாவில் சிறுநீரக நோயாளிகளுக்கு இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை ஆரம்பம்

வடமாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் சத்தியலிங்கம்
Image caption வடமாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் சத்தியலிங்கம்

இலங்கையில் சிறுநீரக நோயாளர்கள் அதிகமாகவுள்ள இரண்டாவது மாவட்டமாக இருப்பதனால், வவுனியா அரச பொது வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கு இரத்தம் சுத்திகரிக்கும் (டயாலிஸிஸ்) பிரிவு ஒன்றை ஆரம்பித்திருப்பதாக வடமாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் சத்தியலிங்கம் தெரிவித்தார்.

இதற்கு அடுத்ததாக முல்லைத்தீவு மாவட்டத்திலும் அதிக எண்ணிக்கையான சிறுநீரக நோயாளர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதனால், அந்த வைத்தியசாலையிலும் சிறுநீரக நோயாளர்களுக்கு இரத்தம் சுத்திகரிக்கும் பிரிவு ஒன்றை ஆரம்பிப்பதற்கு மத்திய அரசின் உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

வடமாகாண சபையைப் பொறுப்பேற்றபோது, இந்த மாகாணத்தில் 40 வீதமான வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் இருக்கவில்லை என்றும், அவற்றில் அரைவாசிக்கும் மேற்பட்ட வைத்தியசாலைகளுக்கு மத்திய அரசின் ஊடாக வைத்தியர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

ஏனைய வைத்தியசாலைகளில் பதில் வைத்தியர்களைக் கடமையாற்றுவதற்கான ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது என்றும் வடமாகாண வைத்தியசாலைகளுக்கான வைத்தியர்களை நியமிப்பதில் மாகாண சபைக்கு அதிகாரம் இல்லாமலிருப்பது ஒரு முக்கிய பிரச்சினையாக இருப்பதாகவும் மாகாண அமைச்சர் சத்தியலிங்கம் குறிப்பிட்டார்.

வைத்தியர்களைப் புதிதாக நியமிப்பது, அவர்களுக்கான இடம் மாற்றங்களைச் செய்வது போன்ற அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திடமே இருக்கின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அந்த அதிகாரங்கள் மாகாணசபையிடம் இல்லை என்பதால் எந்தெந்த வைத்தியசாலைக்கு வைத்தியர்கள் தேவை, எத்தனை பேர் தேவை என்ற புள்ளிவிபரத்தைச் சமர்ப்பித்து, அதன் அடிப்படையில் மத்திய அரசாங்கத்தின் ஊடாக நியமனங்கள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.