வெளிமாவட்ட மீனவர்களுக்கு முல்லைத்தீவு நீதிமன்றம் அபராதம்

பிடிபட்ட படகுகள் சில
Image caption பிடிபட்ட படகுகள் சில

வெளிமாவட்டத்தில் இருந்து வந்து முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் சட்டவிரோதமான தொழில் முறையில் மீன்பிடித்த 12 மீனவர்களுக்கு முல்லைத்தீவு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதுடன் அவர்களின் படகுகள் உள்ளிட்ட தொழில் உபகரணங்களையும் அரசுடைமையாக்கியிருக்கிறது.

இரவில் மின்பிறப்பாக்கியின் உதவியுடன் வெளிச்சம் பாய்த்து மீன்களைக் கவர்ந்திழுத்து சுருக்கு வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தவர்களே இவ்வாறு கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார்கள்.

இவர்களுக்கு தலா மூவாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதுடன், அவர்களுக்கு சொந்தமான 25 லட்ச ரூபாய் பெறுமதியான உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

இரவில் வெளிச்சம் பாய்ச்சி சுருக்கு வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தல், டைனமைட் பயன்படுத்தி மீன்பிடித்தல் போன்ற செயற்பாடுகள் அரசினால் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. இத்தகைய மீன்பிடிமுறைகளினால் மீனவர்களுக்கு அதிக இலாபம் ஏற்படலாம். ஆனால் கடல் வளங்கள் அழிந்து போகும் என்ற காரணத்தினாலேயே இவைகள் தடைசெய்யப்பட்டிருக்கின்றன என்று முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் உதவிப் பணிப்பாளர் ஜே.சுதாகரன் தெரிவித்துள்ளார்.