தமிழரசுக் கட்சியின் தலைவராக மாவை சேனாதிராஜா தெரிவு

  • 6 செப்டம்பர் 2014
தமிழரசுக் கட்சித் தலைவர் பொறுப்பில் இனி மாவை சேனாதிராஜா இருப்பார் என்றாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தன் நீடிப்பார்
Image caption தமிழரசுக் கட்சித் தலைவர் பொறுப்பில் இனி மாவை சேனாதிராஜா இருப்பார் என்றாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தன் நீடிப்பார்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முக்கிய அரசியல் கட்சியாகிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக அதன் செயலாளராக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.

இரண்டாவது நாளாக சனிக்கிழமை வவுனியா கலாசார மண்டபத்தில் நடைபெற்ற அந்தக் கட்சியின் பொதுச் சபைக் கூட்டம் கட்சியின் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையில் கூடி புதிய நிர்வாக சபையினரைத் தெரிவு செய்துள்ளது.

இந்தத் தெரிவின்போதே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக மாவை சேனாதிராஜா தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.

இதுவரையில் தலைவராக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவராகத் தொடர்ந்து பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளியன்று ஆரம்பமாகிய தமிழரசுக் கட்சியின் 15 ஆவது மூன்று நாள் தேசிய மாநாட்டின் செயற்குழுவில் முதலில் மாவை சேனாதிராஜா தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

தொடர்ந்து இரண்டாவது நாள் நடைபெற்ற பொதுச்சபை கூட்டத்தில் அதற்கன அங்கீகாரம் வழங்கப்பட்டு அவர் அதிகாரபூர்வமாக தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளராக இ.துரைராஜசிங்கம் தெரிவு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

செயலாளர் பதவிக்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராஜாவைத் தெரிவு செய்வதற்கு கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் விருப்பம் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், கட்சித் தலைமையின் விருப்பத்திற்கமைவாக இ.துரைராஜசிங்கம் செயலாளராகத் தெரிவு செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது,

கட்சியின் பொருளாளர், நிர்வாகச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாக சபையினரும் பொதுச்சபை கூட்டத்தில் தெரிவு செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது,