இலங்கை வந்த ஜப்பானியப் பிரதமர் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை

ஜப்பானியப் பிரதமருடன் இலங்கை ஜனாதிபதி படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஜப்பானியப் பிரதமருடன் இலங்கை ஜனாதிபதி

இலங்கை வந்துள்ள ஜப்பானியப் பிரதமர் ஷிண்ஸோ அபேவுக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகளை அடுத்து இருநாடுகளும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், கடல் வழி வர்த்தகத்தில் இலங்கை ஜப்பானுக்கும் இடையிலான ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் சர்வதேச நிதி உதவிகள் மூலம் இலங்கையில் சமூகப் பொருளாதார வளர்ச்சிப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவது தொடர்பில் இலங்கை ஜனாதிபதி ஜப்பானியப் பிரதமருக்கு இக்கூட்டறிக்கையில் நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தொழில்துறையிலும், உள்நாட்டுக் கட்டமைப்பிலும் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் கூடுதலான முதலீடுகளை செய்ய ஜப்பான் சம்மதம் தெரிவித்துள்ளது.

ஐநா மனித உரிமை ஆணையாளருக்கு அழைப்பு

யுத்தத்துக்கு பின்னரான சமூக நல்லிணக்கத்தில் இலங்கை கண்டுவரும் முன்னேற்றங்களை ஜப்பானியப் பிரதமர் பாராட்டியுள்ளதாக இந்தக் கூட்டறிக்கையில் தெரிவிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் ஐநாவின் புதிய மனித உரிமை ஆணையாளருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட ஜனாதிபதி ராஜபக்ஷ விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐநாவின் புதிய மனித உரிமை ஆணையாளர் இளவரசர் செய்த் அல் ஹுசைன் 2014ஆம் ஆண்டில் இலங்கை வந்து நிலைமைகளை பார்வையிட இலங்கை அரசு அழைப்பு விடுக்கும் என்றும் இந்தக் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் விவகாரத்தில் இலங்கை கண்டுள்ள முன்னேற்றங்களை இந்தக் கூட்டறிக்கையில் பாராட்டியுள்ள ஜப்பானியப் பிரதமர், எல் எல் ஆர் சி பரிந்துரைகள் அமலாக்கப்பட வேண்டும் என்றும், சர்வதேச சமூகத்துடன் இலங்கை தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இருபத்து நான்கு வருட இடைவெளிக்குப் பின்னர் ஜப்பானியப் பிரதமர் ஒருவர் இலங்கை வந்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.