ஐநா விசாரணையை நிராகரிக்கிறோம்: மனித உரிமை கூட்டதொடரில் இலங்கை

ஐநாவில் ரவிநாத ஆரியசிங்க படத்தின் காப்புரிமை webtv.un.org
Image caption ஐநாவில் ரவிநாத ஆரியசிங்க (கோப்புப் படம்)

ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள ஐநா மனித உரிமை கவுன்சிலின் 27ஆவது கூட்டத்தொடரின் துவக்கத்தில்இலங்கை சார்பாக உரையாற்றியுள்ள மனித உரிமை கவுன்சிலுக்கான இலங்கையின் நிரந்தரத் தூதர் ரவிநாத ஆரியசிங்க, இலங்கையில் நடந்ததாகத் தெரிவிக்கப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் விசாரணை நடத்துவதற்குப் பணித்திருந்த ஐநா மனித உரிமைக் கவுன்சில் தீர்மானத்தையும், ஐநா மனித உரிமை அலுவகம் நடத்தக்கூடிய விசாரணையையும் இலங்கை திட்டவட்டமாக நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஐநா மனித உரிமைக் கவுன்சிலின் தீர்மானமும், அந்த தீர்மானத்தின் வழியாக ஐநா மனித உரிமையாளர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களும், இலங்கையின் இறையாண்மையையும் சர்வதேச சட்டங்களையும் மீறுவதாக உள்ளது என ஐநா மனித உரிமை கவுன்சிலுக்கான இலங்கைப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க கூறியிருந்தார்.

இலங்கையில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் குலைப்பதாக இந்த தீர்மானமும் விசாரணையும் அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கூட்டத்தொடரில், இலங்கை விசாரணை சம்பந்தமாக ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வாய்வழியாக தகவல் வழங்கும்போது, அது பற்றிய கூடுதல் விவரங்களை இலங்கை தெரிவிக்கும் என்று ஆரிய சிங்க தெரிவித்தார்.

உள்ள்நாட்டளவில் நல்லிணக்க முயற்சி

ஐநா மனித உரிமை மன்ற தீர்மானத்தையும் அதன் வழியாக வருகின்ற விசாரணையையும் இலங்கை நிராகரித்தாலும் உள்நாட்டளவில் நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் வலியுறுத்தினார்.

ஐநா மனித உரிமை கவுன்சிலின் முந்தைய கூட்டத்தொடர் கடந்த ஜூனில் நிறைவடைந்ததற்கு பிற்பாடு, இலங்கையில் நல்லிணக்கத்துக்கான விசேட துறை ஒன்று அமைக்கப்பட்டிருப்பதையும் காணாமல்போனவர்கள் பற்றிய விசாரணைக் கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டிருப்பதையும், குற்றச்செயலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் பாதுகாப்பு தொடர்பிலான சர்வதேச நிபுணர்கள் அடங்கிய ஆலோசனைக் குழு ஒன்று அமைப்பட்டிருப்பதையும் ரவிநாத ஆரியசிங்க சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் மனித உரிமை ஆர்வலர்களுக்கு எதிராக அச்சுறுத்தல்கள் விடப்படுவதாக கூறப்படுவதை இலங்கை நிராகரிப்பதாக அவர் தெரிவித்தார். எல்லா நேரங்களிலுமே புகாரிகள் உரிய முறையில் விசாரிக்கபடுவதாகவும், அரசியல் சாசனம் உத்தரவாதம் வழங்கும் நிவாரண நடவடிக்கைகள் மனித உரிமை ஆர்வலர்களுக்கு உண்டு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை நெடுங்காலமாகவே பல்வேறு மத இனக் குழுக்கள் சமாதானத்துடன் வாழ்ந்த ஒரு பூமி என்றும், ஆனாலும் அங்கே மதக் குழுக்கள் இடையிலான ஒரு சில வன்சம்பவங்கள் நடந்துள்ளன என்றும், அவை தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகள் மன்னெடுக்கப்படுவதாகவும், மதக் குழுக்களுக்கு எதிரான வன்முறையை அரசாங்கம் கண்டித்துவருவதாகவும் ஐநா மனித உரிமை கவுன்சிலின் 27ஆவது கூட்டத்தொடர் தொடக்கத்தில் இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒத்துழைக்க கோரிக்கைகள்

ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலக விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும் என்று முன்னதாக புதிய ஆணையாளர் தனது துவக்க உரையில் கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தவிர ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் இலங்கை சம்பந்தமாக நடத்துகின்ற விசாரணை அறிக்கையை தாம் எதிர்பார்த்திருப்பதாக மனித உரிமை கவுன்சிலுக்கான அமெரிக்காவின் தூதர் கீத் ஹார்ப்பர் கூறியிருந்தார்

இந்த விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று அமெரிக்கா மீண்டும் கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்திருந்தார்.

ஐநா அதிகாரிகள் இலங்கையில் வந்து எவ்வித அச்சுறுத்தலோ தடையுமோ இன்றி விசாரணைகளை நடத்த இலங்கை அரசு வழிவிட வேண்டுமென மனித உரிமை கவுன்சிலுக்கான பிரிட்டிஷ் தூதர் கரென் பியர்ஸ் கூறியிருந்தார்.>