இந்திய மீனவர்கள் 55 பேர் இலங்கையில் கைது; 7 படகுகள் பறிமுதல்

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள்
Image caption கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள்

இலங்கையின் வடக்கே, பருத்தித்துறை கடற்பரப்பில் 70 அடிக்கும் அதிக நீளமுடைய மிகப்பெரிய இந்திய மீனவர் படகொன்றைக் கைப்பற்றிய இலங்கை கடற்படையினர், அதிலிருந்த இருபதுக்கும் மேற்பட்ட இந்திய மீனவர்களையும் வியாழனன்று கைது செய்திருக்கின்றனர்.

பருத்தித்துறை மற்றும் தலைமன்னார் கடற்பிரதேசத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 55 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருப்பதுடன், அவர்கள் வந்த ஏழு மீன்பிடி படகுகளையும் கைப்பற்றியிருப்பதாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

தலைமன்னார் பகுதியில் கைது செய்யப்பட்ட 30 மீனவர்களையும் வரும் 24 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதிமன்றம் வியாழனன்று உத்தரவிட்டிருக்கின்றது.

பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை கடற்டையினர் யாழ்மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் வியாழனன்று காலை கையளித்திருந்தனர். இவர்களை செப்டம்பர் 24 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பருத்தித்துறை கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட 70அடிக்கும் அதிக நீளமுள்ள மீன்பிடி படகொன்றை இலங்கைக் கடற்படையினரும், கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளும் இப்போதுதான் முதற்தடவையாகக் கண்டிருப்பதாக யாழ்மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் நடராஜா கணேசமூர்த்தி பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

Image caption கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களின் வலைகள்

இதற்கிடையில் இந்திய மீனவர்கள் இலங்கையின் கடற் சுற்றாடலை சீரழிப்பதாகக்கூறியுள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இலங்கைக் கடற்பரப்பினுள்ளே வைத்து சட்டவிரோதமாக மீன்பிடிப்பதற்காகக் கைது செய்யப்படுகின்ற மீனவர்கள் விடுதலை செய்யப்படுவதாகவும், ஆனால் அவர்களுடைய மீன்பிடி படகுகளை அரசாங்கம் விடுவிக்க மாட்டாது என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அவ்வாறு படகுகுளை விடுவித்தால், அந்த மீனவர்கள் மீண்டும் மீண்டும் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு வருவார்கள் என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நூற்றுக்கணக்கில் இலங்கைக் கடற்பரப்பினுள் வரும் இந்திய மீனவர்கள் கடலின் அடிமடியைஒ துடைத்து எடுக்கும் வகையான வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதனால் இங்குள்ள வளங்கள் அழிக்கப்படுவுதாகவும், இது இலங்கைக்கு மட்டுமல்லாமல், இந்தியாவுக்கும் நல்லதல்ல என்றும் இலங்கை ஜனாதிபதி கூறியிருக்கின்றார்.

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பினுள் வருவதைப் பெரிதாக தாம் எதிர்க்கவில்லை என்றும் ஆனால் அவர்கள் கடல் வளத்தை அழிக்கும் வகையில் மீன்பிடிப்பதையே தாங்கள் எதிர்ப்பதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்திருக்கிறார். இந்திய மீனவர்களால் கடல் வளம் அழிக்கப்படுவதனால், இலங்கையின் பொருளதாரம் பாதிக்கப்படுவதுடன், குறிப்பாக நாட்டின் வடக்கு கிழக்குப் பிரதேச மீனவர்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியிருக்கிறார்.