'ஊவா மாகாணத் தேர்தலில் 60 வீதத்துக்கும் அதிகமான வாக்குப் பதிவு'

'ஊவா மாகாணத் தேர்தலில் 60 வீதத்துக்கும் அதிகமான வாக்குப் பதிவு'
Image caption 'ஊவா மாகாணத் தேர்தலில் 60 வீதத்துக்கும் அதிகமான வாக்குப் பதிவு'

இலங்கையில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊவா மாகாண சபைக்கான தேர்தல் வாக்களிப்பில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

60 வீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவானதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பு சுமூகமாக நடைபெற்றதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தேர்தல் தினமாகிய இன்று குறிப்பிடத்தக்க அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறாத போதிலும் பதுளை மாவட்டத்தில் ஒரிரு அசம்பாவிதங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மஹியங்கனையில் ஜே.வி. பியினால் முதலமைச்சர் வேட்பாளராக முன் வைக்கப்பட்டுள்ள சமந்த வித்தியாரட்னவின் தேர்தல் அலுவலகம் அடையாளந்தெரியாத ஆட்களினால் தாக்கப்பட்டுள்ளது.

பண்டாரவளை பிரதேசத்தில் ஐ.ம.சு. மு ஆதரவாளர்களுக்கும் ஐ. தே. கட்சி ஆதரவாளர்களுக்குமிடையிலான கைகலப்பில் பண்டாரவளை மாநகர முதல்வர் உட்பட இருவர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பண்டாரவளை மாநகர முதல்வர் துமிந்த விஜயசிறி முறைப்பாடு செய்வதற்காக போலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த வேளை, அங்கு காணப்பட்ட ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் தாக்கப்பட்டதாக ஐ. தே. கட்சி கூறுகின்றது.

'வன்செயல்கள் நடந்தன'

இதற்கிடையே, வாக்களிப்பு கணிசமான முறைகேடுகள் மற்றும் வன்செயல்களுடன் நடைபெற்றதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கஃபே அமைப்பு கூறியுள்ளது.

வாக்களிப்பு ஆரம்பித்து இரண்டு மனித்தியாலங்களின் பின்னர் பல இடங்களில் முறைகேடுகள் மற்றும் வன்செயல்கள் நடந்ததாக அந்த அமைப்பின் தேசிய அமைப்பாளரான அப்துல் மனாஸ் மக்கீன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் செயலக தகவல்களின்படி 834 வாக்கு சாவடிகளில் வாக்களிப்பு நடைபெற்று முடிந்துள்ள நிலையில் நள்ளிரவு தொடக்கம் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இரு போனஸ் ஆசனங்கள் அடங்கலாக பதுளை மாவட்டத்திலிருந்து 18 பேரும் மொனராகலை மாவட்டத்திலிருந்து 14 பேரும் என இந்த தேர்தலில் ஊவா மாகாண சபைக்கு தெரிவு செய்யப்படுகின்றார்கள்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி, பிரதான எதிர்கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி, ஜே.வி.பி மற்றும் ஜனநாயக கட்சி உட்பட 22 அரசியல் கட்சிகள், 11 சுயேட்சைக் குழுக்கள் சார்பாக இந்த தேர்தலில் 617 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள்.

தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலுக்கு பின்னரான அதிகரித்த வன்முறைகளையடுத்து கூடுதலான போலிஸார் சிசில் மற்றும் சீருடைகளில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

போலிஸ் தலைமையக தகவல்கின் படி 11,000 போலிஸாருடன் மேலதிகமாக 1000 சிறப்பு அதிரடிப் படை வீரர்களுடன் 500 பேர் கொண்ட புலனாய்வுத் துறையினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

இலங்கையில் அடுத்த ஆண்டு முற்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் இந்த தேர்தல் முடிவு ஆளும் கட்சி மற்றும் பிரதான எதிர்கட்சிகளின் செல்வாக்கை கோடிட்டு காட்டுவதாக அமையும் என அரசியல் அவதானிகளால் கருதப்படுகின்றது.

இந்தத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய தொழிலாளர் சங்கம் மற்றும் மலையக மக்கள் முன்னனி ஆகிய மலையக அரசியல் கட்சிகள் தமது வேட்பாளர்களை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியுடன் இணைந்ததாக நிறுத்தியுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.