ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி

  • 21 செப்டம்பர் 2014
Image caption ஆளுங்கட்சியின் வாக்குபலம் ஊவா மாகாணத்தில் சரிந்துள்ளது

இலங்கையில் நடைபெற்று முடிந்த ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.

எனுனும் ஆளுங்கட்சியின் ஆதரவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. அத்துடன் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கான ஆதரவும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது.

பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களை உள்ளடக்கிய ஊவா மாகாணசபைக்குரிய 34 ஆசனங்களில் 2 போனஸ் ஆசனங்கள் அடங்கலாக 19 ஆசனங்களை ஆளுங்கட்சி வென்றுள்ளது.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி 51 வீதமான வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 40 வீதமான வாக்குகளுடன் 13 ஆசனங்களை வென்றுள்ளது. ஏனைய இரண்டு ஆசனங்களையும் ஜே.வி.பி பெற்றுள்ளது.

2009-ம் ஆண்டு தேர்தல்

2009-ம் ஆண்டு மாகாணசபைத் தேர்தல் முடிவுகளின் படி, 72.32 வீதமான வாக்குகளை வென்றிருந்த அரசாங்கக் கூட்டணி 25 ஆசனங்களை வென்றிருந்தது.

ஐக்கிய தேசியக் கட்சி 22.32 வீதமான வாக்குகளுடன் 7 ஆசனங்களையும், ஜே.வி.பி ஒரு ஆசனத்தையும், மலையக மக்கள் முன்னனி ஒரு ஆசனத்தையும் வென்றிருந்தன.

குறிப்பாக, 2009-ம் ஆண்டு மாகாணசபைத் தேர்தலில் ஆளுங்கட்சி வென்றிருந்த வாக்குகளில் இம்முறை 21 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவு 18 வீதத்தால் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டின் இறுதியில் நடந்த தென் மாகாணசபை மற்றும் மேல் மாகாணசபை தேர்தல் முடிவுகளிலும் இதுபோன்ற நிலையே காணப்பட்டது.

சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக் கட்சி ஊவா மாகாண தேர்தலில் முதற் தடவையாக போட்டியிட்ட போதிலும் ஒரு ஆசனத்தை கூட பெறமுடியாமல் தோல்வியடைந்துள்ளது.

Image caption ஊவாவில் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குபலம் கணிசமாக அதிகரித்துள்ளது

இதே நிலையே முஸ்லிம் வாக்குகளை இலக்கு வைத்து கூட்டாக ஜனநாயக தேசிய முன்னணியின் கீழ் வேட்பாளர்களை நிறுத்திய முஸ்லிம் அரசியல் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ளது.

பதுளை மாவட்டம்

பதுளை மாவட்டத்தில் 2009-ம் ஆண்டு 68 வீதமான வாக்குகளுடன் 14 ஆசனங்களை வென்றிருந்த அரசாங்கக் கூட்டணி, இம்முறை 47 வீதமான வாக்குகளுடன் 9 ஆசனங்களையே வென்றுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி, 2009-ம் ஆண்டு தேர்தலில் 26 வீத வாக்குகளுடன் 5 ஆசனங்களை பெற்றிருந்தது. இம்முறை 45 வீதமான வாக்குகளுடன் ஆசனங்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

ஜே.வி.பி 2009- இல் வென்றிருந்த ஒரு ஆசனத்தை இம்முறையும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. அக்கட்சியின் வாக்குபலம் இம்முறை அதிகரித்துள்ளது.

அரசாங்கக் கட்சியின் கீழ் செந்தில் தொண்டமான், வடிவேல் சுரேஷ் மற்றும் ஆறுமுகம் கணேசமூர்த்தி ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் வேலாயுதம் ருத்ரதீபன் வெற்றிபெற்றுள்ளார்.

மொனராகலை மாவட்டம்

படத்தின் காப்புரிமை caffesrilanka.org
Image caption இம்முறை தேர்தல் வன்முறைகளில் ஜேவிபி உள்ளிட்ட எதிரணிகளுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தன

மொனராகலை மாவட்டத்தில் 2009-ம் ஆண்டு 81 வீதமான வாக்குகளுடன் 9 ஆசனங்களை வென்றிருந்த ஆளுங்கட்சியின் வாக்குபலம் இம்முறை 58 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஆளுங்கட்சியின் ஆசனங்கள் 8 ஆக குறைந்துள்து.

ஐக்கிய தேசியக் கட்சி கடந்த தேர்தலில் 16 வீதமான வாக்குகளுடன் 2 ஆசனங்களையே வென்றிருந்தது. அந்தக் கட்சி இம்முறை 32 வீதமான வாக்குகளுடன் 5 ஆசனங்களை வென்றுள்ளது.

ஜே.வி.பி 2009 தேர்தலில் 3 சத வீத வாக்குகளைப் பெற்று ஆசனம் எதனையும் பெறவில்லை. இம்முறை அக்கட்சியின் வாக்குப்பலம் 7 வீதமாக அதிகரித்து ஒரு ஆசனத்தை வென்றெடுத்துள்ளது.

ஊவா மாகாணசபைக்குரிய மாவட்ட ரீதியான பிரதிநிதித்துவம் 2009-ம் ஆண்டு தேர்தல் வரை பதுளை மாவட்டத்திற்கு 21 ஆசனங்கள், மொனராகலை மாவட்டத்திற்கு 11 ஆசனங்கள் என ஓதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இம்முறை, பதுளை மாவட்டத்திற்கான அங்கத்துவம் தேர்தல் செயலகத்தால் 18 ஆக குறைக்கப்பட்டு, மொனராகலை மாவட்டத்திற்கான அங்கத்துவம் 14 ஆக அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.