பாலியல் வன்முறைகளுக்கு எதிராகப் போராட்டம்

மட்டக்களப்பில் நடந்த போராட்டம்
Image caption மட்டக்களப்பில் நடந்த போராட்டம்

பாலியல் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மட்டக்களப்பு நகரில் பெரும் எண்ணிக்கையிலான தமிழ் மற்றும் முஸ்லிம் பெண்கள் ஒன்று கூடி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெணகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக மகளிர் அமைப்புகளினால் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 10ம் மஞ்சந்தொடுவாய் குவைத் சிற்றியில் 8 வயது சிறுமி பாலியல் பாலியல் துஷ்பிரயோகத்தின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் செவ்வாய் கிழமை நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியல் எதிர்வரும் 10ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகும் தினத்தையொட்டி நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு போராட்டம் மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவத்திற்கான பெண்கள் கூட்டமைப்பு மற்றும் மாவட்ட மகளிர் மகா சம்மேளனம் உட்பட பல்வேறு மகளிர் அமைப்புகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு நகர் மணிக்கூட்டு கோபுர சந்தியிலிருந்து நீதிமன்ற கட்டிட தொகுதி வரையில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட மகளிர் அமைப்புகள் சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும். அது தொடர்புடைய சட்ட நடிவடிக்கைகள் துரிதப்படுத்தப் பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன.

போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் " பெண்கள் மற்றும் சிறுமிகளை வன்முறைக்கு உட்படுத்தாத ஆண்கள் சமூகத்தை உருவாக்குவோம்", " வன்முறைகள் அற்ற நாடும் வீடும் எமக்குத் தேவை " உட்பட பல்வேறு வாசக அட்டைகளை தமது கைகளில் ஏந்தியவாறு காணப்பட்டார்கள்.

குறிப்பாக குவைத் சிட்டி சம்பவத்தில் பாலியல் துஷ்பிரயோகத்தின் பின்னர் கொலை செய்யப்பட்ட சிறுமி சீமாவின் கொலை தொடர்புடைய சந்தேக நபருக்கு சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆஜராக கூடாது. அந்த கொலையாளிக்கு அதி உச்ச தண்டணை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் பதாதைகளும் அவர்களிடம் காணப்பட்டது.