'சிங்கள இந்துக்கள், சிங்கள முஸ்லிம்கள், சிங்கள கிறிஸ்தவர்கள்'

  • 29 செப்டம்பர் 2014
படத்தின் காப்புரிமை bodu bala sena
Image caption மியன்மாரின் சர்ச்சைக்குரிய அஷின் விராத்து தேரர் சிறப்பு விருந்தினர்

இலங்கையில் கடந்த காலங்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான பல்வேறு தாக்குதல்களுக்கும் பிரச்சாரங்களுக்கும் காரணமாக இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்ற கடும்போக்கு பௌத்த அமைப்பான பொது பல சேனா அமைப்பு சனிக்கிழமை கொழும்பில் தனது மாநாட்டை நடத்தியது.

மியன்மாரின் சர்ச்சைக்குரிய கடும்போக்கு பௌத்த அமைப்பான 969 என்ற அமைப்பின் ஸ்தாபக தலைவர் அஷின் விராத்து தேரர் இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இங்கு உரையாற்றிய அஷின் விராத்து தேரர், முஸ்லிம்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தமக்கு வீசா அனுமதி அளித்தமைக்காக இலங்கை ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார்.

அதேபோல தொடர்ந்தும் இலங்கையின் பொது பல சேனா அமைப்போடு சேர்ந்து இயங்கவுள்ளதாகவும் மாநாட்டில் விராத்து தேரர் தெரிவித்திருந்தார்.

இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் வளர்ந்துவருவதாகவும் இலங்கை ஒரு பெளத்த நாடு என்பதை உறுதிப்படுத்தும் தீவிர நடவடிக்கைகளில் இறங்கப்போவதாகவும் பொது பல சேனா அமைப்பின் தலைவர்கள் இங்கு தெரிவித்தனர்.

இங்கு பேசிய பொது பல சேனாவின் தலைவர்களில் ஒருவரான திலந்த விதானகே, இலங்கையின் பெயரை சிங்கள அரசு என்று மாற்ற வேண்டும் என்றும் இலங்கையிலுள்ள இந்துக்களை சிங்கள இந்துக்கள் என்றும், கிறிஸ்தவர்களை சிங்கள கிறிஸ்தவர்கள் என்றும் முஸ்லிம்களை சிங்கள முஸ்லிம்கள் என்றும் அழைக்க வேண்டும் என்றும் கூறினார்.

இலங்கையின் தேசியக் கொடியில் பல்லினங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அடையாளங்களை மாற்றி தனிச் சிங்கள அடையாளத்தை மட்டுமே கொண்டுவர வேண்டும் என்றும் அதற்கான அரசியல் நடவடிக்கைளில் இறங்கப் போவதாகவும் தங்களின் திட்டங்களை பொது பல சேனா அமைப்பு இங்கு வெளியிட்டது.

சிறுபான்மை மத அமைப்புகள் கண்டனம்

எனினும் பொது பல சேனாவின் கடும்போக்கு நடவடிக்கைளுக்கும் மியன்மாரின் சர்ச்சைக்குரிய விராத்து தேரரை இலங்கைக்கு அழைத்துவருவதற்கும் முஸ்லிம் அமைப்புகள் ஏற்கனவே தங்களின் எதிர்ப்பினை தமிழோசையிடம் வெளிப்படுத்தியிருந்தன.

இலங்கையிலுள்ள இந்துக்களை மற்ற மதங்களின் பிடியில் இருந்து காப்பாற்றப் போவதாகவும் பொதுபல சேனா இங்கு தெரிவித்தது.

ஆனால், பொது பல சேனாவின் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் பிபிசி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன், தமிழ் பேசும் சிறுபான்மை சமூகங்களை பிரித்தாளும் சூழ்ச்சிகள் நடந்துவருவதாகக் கூறினார்.

சிங்கள- பெளத்த ஆட்சியாளர்களினாலேயே வடக்கு கிழக்கில் இந்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கந்தையா நீலகண்டன் தெரிவித்தார்.

அதேபோல, இனத்துவேஷ கருத்துக்களையும் மதவாத பிரசாரங்களையும் முன்னெடுத்துவரும் பொது பல சேனா அமைப்புக்கு எதிராக இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதுள்ளமை தொடர்பில் கிறிஸதவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அமைப்பாளர் அருட்தந்தை எம். சக்திவேல் தமிழோசையிடம் விசனம் வெளியிட்டார்.

பொது பல சேனாவுக்கு அரசாங்கத்தின் ஆதரவு இருப்பதாகவும் அந்த அமைப்பின் கருத்துக்களை அரசாங்கத்தின் நிலைப்பாடாகவே கருத வேண்டியிருப்பதாகவும் அருட்தந்தை சக்திவேல் கூறினார்.

இதனிடையே, பொது பல சேனாவின் மாநாடு மற்றும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பான அரசாங்கத்தின் அதிகாரபூர்வ நிலைப்பாட்டை அறிந்துகொள்ள பிபிசி தமிழோசை எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.