போப்பாண்டவர் வருகையால் இலங்கையில் நல்லிணக்கம் உருவாகும்: மன்னார் ஆயர்
இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்களாகிவிட்டபோதிலும், நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என கவலை வெளியிட்டுள்ள மன்னார் ஆயர் ராயப்பு ஜோசஃப் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்துள்ள ஜனாதிபதியின் அழைப்பையேற்று, திருத்தந்தை அவர்கள் இங்கு வருவதன் மூலம் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு வழி பிறக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றார்.
பட மூலாதாரம், AFP
போப்பாண்டவர் பிரான்சிஸ்
நல்லிணக்கத்திற்கான நல்லெண்ண வெளிப்பாடாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திக்கச் சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள், வடக்கு கிழக்கு பிரதேசத்தைச் செர்ந்த கத்தோலிக்க ஆயர் ஒருவரை அழைத்துச் சென்றிருக்கலாம் என்ற ஒரு கருத்து நிலவுகின்றதே என கேட்டதற்கு, இணக்கப்பாடு இல்லாத காரணத்தினால் தமிழ் மக்கள் சார்பில் ஆயர் ஒருவரை, ஜனாதிபதி தன்னுடன் அழைத்துச் செல்லாமல் சென்ற நிகழ்வு இடம்பெற்றிருப்பதாக மன்னார் ஆயர் ராயப்பு ஜோசஃப் தெரிவித்தார்.
எனினும், தனியாகச் சென்று வரவேண்டும் என்று அவர் தீர்மானித்திருக்கக் கூடும் என்பதனாலேயே அவ்வாறு அவர் செய்யவில்லை. எனினும் இது குறித்து குறை கூற முடியாது என்றும் அவர் கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இலங்கை வரும்போது, போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயரங்களை அவர் கேட்டறிவதன் மூலம் ஒரு நன்மை ஏற்படக்கூடும் என்பது மன்னார் ஆயருடைய கருத்தாகும்.
அது மட்டுமன்றி, ஓர் அரசியல் தீர்வு ஏற்படுவதற்கும் திருந்தந்தையின் வருகை வழிவகுக்கும் என்று எதிர்பார்த்திருப்பதாகவும் மன்னார் ஆயர் ராயப்பு ஜோசஃப் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.