சபரகமுவ பல்கலை. மாணவர்களின் சத்தியாகிரகம் மீது தாக்குதல்

Image caption சபரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த 39 நாட்களாக சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்

இலங்கையில் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சபரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மீது நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு அடையாளம் தெரியாத குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

இரத்தினபுரி மாவட்டம், பம்பஹின்ன சந்தியில் கூடாரம் அமைத்து சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய குழுவினர், சத்தியாகிரக கூடாரத்தையும் அடித்து நொறுக்கி பெற்றோல் குண்டு வீசி தீவைத்துள்ளதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேரும் வெளியார் இருவரும் காயமடைந்தள்ளனர்.

காயமடைந்த மாணவர்களில் 6 பேர் தொடர்ந்தும் பலாங்கொடை அரசாங்க மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக மாணவர் சம்மேளனத்தின் ஏற்பாட்டாளரான ரசிந்து ஜயசிங்க கூறினார்.

இந்த சம்பவத்தின் போது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியொன்றும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

Image caption 'தலைக்கவசம் அணிந்திருந்தவர்கள் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்'

தாக்குதலை நடத்தியவர்கள் தங்களை அடையாளம் காணமுடியாதவாறு தலைக்கவசம் அணிந்திருந்ததாகவும் தடிகள் , சைக்கிள் செயின் மற்றும் வாள்கள் போன்றவற்றை பயன்படுத்தியே தாக்குதல் மேற்கொண்டதாகவும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் ஏற்பாட்டாளர் கூறினார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பாக சிறப்பு பொலிஸ் குழுவொன்று விசாரணைகளை நடத்திவருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண கூறினார்.

சில நாட்களுக்கு முன்னர், மாணவர் விடுதி கட்டடமொன்றை திறந்து வைப்பதற்காக உயர்கல்வி அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்க அங்கு சென்றிருந்த போது, மாணவர்கள் எதிர்ப்பு நடிவடிக்கையில் ஈடுபட்டதன் காரணமாக பல்கலைக்கழகத்தில் நெருக்கடி நிலை ஏற்பட்டது.

இதன் பின்னனியில் பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்பட்டது.

பல்கலைக்கழகத்தை மீண்டும் திறக்க வேண்டும், மாணவர் சங்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டும், தடைசெய்யப்பட்ட மாணவர்களை மீண்டும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்துள்ளனர்.

இதேவேளை. சபரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் சபரகமுவ பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் நாட்டின் பல பகுதிகளிலும் ஸ்ரீ ஜயவர்தனபுர, பேராதனை மற்றும் றுகுணு உள்ளிட்ட பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் இன்று சனிக்கிழமை வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.