'சரத் பொன்சேகா பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்'

  • 17 அக்டோபர் 2014
'சரத் பொன்சேகா பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்'
Image caption 'சரத் பொன்சேகா பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்'

இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா அவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து இலங்கை தேர்தல் ஆணையர் நீக்கியுள்ளார்.

இலங்கை சட்ட மா அதிபரின் உத்தரவின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொன்சேகா அவர்களுக்கு வாக்களிக்க தகமை உள்ளதா என்பது குறித்து தேர்தல் ஆணையர் முன்னதாக சட்ட மா அதிபரைக் கேட்டிருந்தார்.

இது குறித்து சட்ட மா அதிபரின் திணைக்களத்தின் சிறப்புக் குழு ஒன்று ஆராய்ந்து, தனது முடிவை தேர்தல் ஆணையருக்கு அறிவித்ததாக இலங்கைச் செய்திகள் கூறுகின்றன.

இதனை அடுத்து 2014 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் இருந்து சரத் பொன்சேகா அவர்களது பெயரை நீக்குவதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணையர் மேற்கொள்வார்.

2013 ஆம் ஆண்டுக்கான வாக்களர் பட்டியலில் சரத் பொன்சேகா அவர்களின் பெயர் இடம்பெற்றிருந்ததன் காரணமாக அவர் கடந்த மேல் மாகான சபை தேர்தலில் கெஸ்பாவவில் உள்ள வாக்களிப்பு நிலையம் ஒன்றில் தனது வாக்கை அளித்திருந்தார்.

இராணுவ நீதிமன்றத்தில் அவருக்கு எதிரான ஒரு தீர்ப்பு வந்திருக்கும் நிலையில் அவர் வாக்களிக்க தகுதி உடையவரா என்று தேர்தல் ஆணையரை சிலர் கேட்டிருந்ததன் அடிப்படையிலேயே தேர்தல் ஆணையர் சட்ட மா அதிபரின் ஆலோசனையைக் கோரியிருந்தார் என்று இலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வரக்கூடிய ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடுவதை தடுக்கும் நோக்கிலேயே தனது பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள சரத் பொன்சேகா அவர்கள், இந்த விடயங்கள் குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தான் எடுத்துச் செல்லவுள்ளதாகத் தெரிவித்தார்.