ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஜனவரியில் ஜனாதிபதி தேர்தல்; ஐதேக மீது 'புலி முத்திரை'

இலங்கையில் எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

அண்மையில் நடந்துமுடிந்த ஊவா மாகாணசபைத் தேர்தலைத் தொடர்ந்து, ஜனாதிபதி தேர்தல் வெகுவிரைவில் நடத்தப்படும் என்று ஊகங்கள் வெளியிடப்பட்டுவந்தன.

படத்தின் காப்புரிமை Radio Vatican
Image caption பாப்பரசர் பிரான்சிஸ் ஜனவரி மாதத்தில் இலங்கை விஜயம் மேற்கொள்வார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது

'ஜனவரி மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும். எந்தத் திகதியில் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் திகதி உறுதிப்படுத்தப்பட்டவுடன் அதனைக் கூறுகின்றேன்' என்று கூறினார் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கின்ற அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல.

கண்டியில் நடந்த நிகழ்வொன்றில் ஊடகங்களிடம் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், இலங்கையில் ராஜபக்ஷ ஆட்சியை அகற்றும் நோக்குடனேயே விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் 2006-ம் ஆண்டில் பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்ட விடயத்தில் நடைமுறை ரீதியான தவறுகள் நடந்திருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

விடுதலைப் புலிகள் மீதான 'தடைநீக்கம்'

அடுத்த ஜனாதிபதி தேர்தல் ஜனவரியில் நடக்க இருக்கின்ற சூழ்நிலையில், விடுதலைப் புலிகள் தொடர்பான ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளூர் அரசியல் மேடைகளில் முக்கிய பிரசார விடயமாக சூடுபிடித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ரணில் விக்ரமசிங்கவின் அண்மைய லண்டன் பயணம் தொடர்பில் அரசாங்கம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது

ஐரோப்பிய நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பையும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் அண்மைய லண்டன் விஜயத்தையும் தொடர்புபடுத்தி கொழும்பின் தெருக்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன.

அமைச்சர்கள் பலருடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் எதிர்க்கட்சித் தலைவரின் ஐரோப்பிய விஜயத்திற்கும் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கத்துக்கும் இடையில் தொடர்பு இருக்கின்றது என்று அரசியல் மேடைகளில் தெரிவித்து வருகின்றனர்.

'அவர் இங்கிலாந்துக்கு சென்றுவிட்டு வந்தார். விடுதலைப் புலிகளின் டயஸ்போரா பிரதிநிதிகள் என்று சொல்லப்படுபவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த படங்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்ததை நாங்கள் கண்டோம்' என்றார் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த.

ஆனால் அரசாங்கத்தின் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை ஐக்கிய தேசியக் கட்சி மறுக்கின்றது.

'மக்களுக்கு கொடுத்த பொய் வாக்குறுதிகள் தொடர்பில் பதில்கூற முடியாத நிலையில், இந்த அரசாங்கம் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு புலி முத்திரை குத்தி தங்களின் இயலாமையை மறைக்கப் பார்க்கின்றது' என்றார் ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க.

பாப்பரசரின் இலங்கை விஜயம்

Image caption 'விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்ததில் நடைமுறை ரீதியான தவறு உள்ளது'

இதனிடையே, பாப்பரசர் பிரான்சிஸ் ஜனவரி 13ம் திகதி முதல் 15ம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக ஏற்கனவே அதிகாரபூர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பாப்பரசர் விஜயம் மேற்கொள்கின்ற காலத்தில் தேர்தல் நடத்தப்படுவதை விரும்பவில்லை என்று இலங்கை கத்தோலிக்கத் திருச்சபை கடந்த மாதம் அறிவித்திருந்தது.

'தேர்தல் பிரசாரங்களுக்கு மத்தியில் பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது அவ்வளவு நல்லது அல்ல' என்று தான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அறிவித்துள்ளதாக திருச்சபை தலைவர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் கடந்த மாதம் ஊடகங்களிடம் கூறியிருந்தார்.