வாக்குறுதி அளித்தும், ஒரு வருடமாக வழக்கு போடாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கேள்வி

தமிழ் அரசியல் கைதியோருவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதாக அறிவித்து ஒரு வருடம் கடந்துள்ள போதிலும், இதுவரை வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை என சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடோன்றை விசாரித்த உச்சநீதிமன்றம் இது சம்பந்தமாக விளக்கமளிக்குமாறு சட்ட மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Sri Lanka Supreme Court
Image caption இலங்கை உச்சநீதிமன்றம்

யாழ் சங்கானை பகுதியில் வசிக்கும் புருஷோத்தமன் அரவிந்தன் எனும் கைதி தாக்கல் செய்த புகாரொன்றை ஆராய்ந்த பின்னரே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபருக்கு எதிராக வவுனியா மேல் நிதிமன்றத்தில் வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளதாக அரச தரப்பு வழக்கறிஞர் கடந்த 2013 ஆண்டு செபம்பர் மாதம் 12ஆம் திகதி உச்சநிதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.

ஆயினும் இதுவரை சந்தேக நபருக்கு எதிராக எந்த விதமான வழக்கும் வவுனியா நிதிமன்றத்தில் அழைக்கப்படவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் புகாரொன்றை மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சமர்ப்பித்துள்ளார்.

சந்தேகநபர் ஒரு வருடத்திற்கும் மேலாக வழக்கு விசாரணையின்றி விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

இந்த குற்றச் சாட்டை பதிவு செய்துக்கொண்ட நிதிமன்றம் இது சம்பந்தமாக எதிர் வரும் நவம்பர் மாதம் 21 ம் திகதி நிதிமன்றத்தில் விளக்கமளிக்குமாறு அரச தரப்பு வழக்கறிஞரருக்கு உத்தரவிடப்பட்டது.