இலங்கையில் கமலேஷ் சர்மா

ஐந்து நாள் விஜயமாக இலங்கை வந்துள்ள பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா அவர்கள் வடபகுதிக்கான ஒரு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைக் கொழும்பில் சந்தித்துப் பேச்சுக்கள் நடத்தியிருக்கின்றார்.

Image caption வட மாகாண ஆளுனருடன் கமலேஷ் சர்மா

போருக்குப் பின்னரான இலங்கையில் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்குப் பொதுநலவாய அமைப்பு தொடர்ந்து ஒத்துழைப்பும் உதவியும் வழங்கும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கமலேஷ் சர்மா அவர்கள் உறுதியளித்திருக்கின்றார்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய உச்சிமாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்து பொதுநலவாய அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளவர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, கமலேஷ் சர்மா அவர்கள் இந்தச் சந்திப்பின்போது எடுத்துரைத்திருக்கின்றார். பொதுநலவாய உச்சி மாநாட்டின் பின்னர் வழமையாக நடைபெறும் ஒரு நிகழ்வாகவே இந்தச் சந்திப்பு நடைபெற்றிருக்கின்றது என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதற்கிடையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா அவர்கள், வடமாகாண ஆளுனர், யாழ் அரச அதிபர், சிவில் சமூகப் பிரதிநிதிகள் என பலதரப்பட்டவர்களைச் சந்தித்து அங்குள்ள நிலைமைகள், மீள் குடியேற்ற நடவடிக்கைகள், நல்லிணக்கச் செயற்பாடுகள் என்பன குறித்து மூடிய கதவுகளுக்குள் ஊடகங்களுக்குத் தகவல்கள் வெளிவராத வகையில் கலந்துரையாடியதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயினும் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதிநிதிகள் எவரையும் அவர் சந்தித்திக்கவில்லை.

அதேநேரம், கொடிகாமம் பிரதேசத்தில் ராமாவில் என்ற இடத்தில் உள்ள இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களையும் கமலேஷ் சர்மா அவர்கள் யாழ் விஜயத்தின்போது சந்தித்து அவர்களின் நிலைமைகள் குறித்து கேட்டறிந்திருக்கின்றார்.

ஆளுனர் அலுவலகத்தில் சுமார் ஒன்றரை மணித்தியாலம் இடம்பெற்ற சந்திப்பின்போது, கடந்த 6 வருடங்களாக வடமாகாணத்தில் இடம்பெற்று வருகின்ற அபிவிருத்திச் செயற்பாடுகள் அதனால் ஏற்பட்டுள்ள நன்மைகள் என்பன பற்றி இந்தச் சந்திப்பின் 80 வீதமான நேரம் அவருக்கு எடுத்துக் கூறியதாக வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி பிபிசியிடம் தெரிவித்தார்.

வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள மீள்குடியேற்றம், கண்ணிவெடி அகற்றல், பொதுமக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள், மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கான வாழ்வாதாரம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் அவருக்கு விளக்கமாக எடுத்துரைத்தாகவும் இத்தகைய முன்னேற்ற நிலைமைகள் குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்ததாகவும் வடமாகாண ஆளுனர் கூறினார்.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மாகாண சபையில் ஆளுனருக்கும் முதலமைச்சருக்கும் உள்ள அதிகாரங்கள் சபைக்குரிய நிதி மூலங்கள் மற்றும் மாகாண சபையின் செயற்பாடுகளைப்பற்றியும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகத்திற்கு விபரமாகத் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.