'காணாமல் போனோரை தேட அனைவரும் ஒன்றிணைய வேண்டும்'

இலங்கையில் காணாமல் போனவர்களை கண்டறியும் முயற்சிகளில் வெற்றி காண வேண்டுமானால், அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று காணாமல் போனோரின் உறவினர்களின் அமைப்பு கோரியுள்ளது.

Image caption காணாமல் போனோரின் உறவினர்கள்

காணாமல் போனவர்களுக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு அருகே, சீதுவ என்னும் இடத்தில் இன்று அந்த அமைப்பினர் நடத்திய கூட்டம் ஒன்றின் போதே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நாட்டின் வடக்கு, கிழக்கு உட்பட பல பகுதிகளிலும் இருந்து கணிசமானோர் தலைநகர் கொழும்புக்கு வந்திருந்தார்கள்.

அங்கு உரையாற்றிய இந்த அமைப்பின் சார்பில் செயற்படுபவர்களில் ஒருவரான வண பிதா. என். சக்திவேல் அவர்கள், சகல இன மக்களும் இணைந்து போராடினாலே காணாமல் போனோரைக் கண்டறிவதற்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும் என்று வலியுறுத்தினார்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருந்தவர்களை மிரட்டும் வகையிலான சுவரொட்டிகள் நேற்று பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்ததன் காரணமாகவே கலந்துகொள்வோரின் எண்ணிக்கை சிறிது குறைவாக இருந்ததாகவும் அவர் கூறினார்.