பதுளை நிலச்சரிவு: 8 உடல்கள் மீட்பு, 300 பேர் சிக்கியிருக்கலாம்?

  • 29 அக்டோபர் 2014
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இலங்கையில் ஊவா மாகாணம் பதுளை மாவட்டத்திலுள்ள தோட்டக் குடியிருப்பு பகுதியொன்றில் இன்று காலை ஏற்பட்ட மண் சரிவு அனர்த்தின் போது 300க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதையுண்டிருக்கலாம் என உறவினர்களினால் அஞ்சப்படுகின்றது.

சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்புகளில் ஏற்பட்டுள்ள இந்த மண் சரிவில் புதையுண்டவர்களை மீட்பதற்கான மீட்பு பணிகளில் ஈடுபட்ட மீட்பு குழுவினரால் இன்று நண்பகல் வரை 8 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை BBC World Service

பண்டாரவளை பிரதேசத்திலுள்ள கொஸ்லந்த பகுதியில் மீரியாபெத்த ஆற்று பள்ளத்தாக்குக்கு அண்மித்த ஏழு தோட்ட குடியிருப்பு(லயன்)களிலுள்ள 68 வீடுகளும் ஆலயமொன்றும் வேறு சில கட்டிடங்களும் மண் சரிவு காரணமாக புதையுண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக அந்த பகுதியில் தற்போது மழை பெய்து வரும் நிலையில் மண் சரிவு அபாயம் குறித்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் ஏற்கனவே குடியிருப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

பாதுகாப்பான இடங்களில் தங்கியிருந்தவர்கள் இன்று காலை தமது உடமைகளை எடுத்து வருவதற்காக சென்றிருந்த போதே இந்த மண்சரிவில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகின்றது.

அந்த பகுதியில் வசித்த குடியிருப்பாளர்களில் அநேகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ள நிலையில் புதையுண்டவர்கள் தொடர்பில் சரியான தகவல்களை தற்போதைக்கு கூற முடியாதிருப்பதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

புதையுண்டவர்களை மீட்கும் பணிகளில் பொலிஸாரும் இராணுவமும் விமானப்படையும் தற்போது ஈடுபட்டுள்ளன. நண்பகல் வரை 8 சடலங்களே மீட்கப்பட்டள்ளதாக பொலிஸ் தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது.

இந்தச் செய்தி குறித்து மேலும்