நிலச்சரிவு மீட்புப் பணிகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நிலச்சரிவு மீட்புப் பணிகள் - காணொளி

இலங்கையில் பதுளை மாவட்டம், கொஸ்லாந்தை மீரியாபெத்தையில் இடம்பெற்ற நிலச்சரிவில் காணாமல் போயுள்ளவர்களில் ஐந்து பேரின் சடலங்கள் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டிருப்பதாக அங்கு இடம்பெற்று வருகின்ற மீட்புப் பணிகளுக்குப் பொறுப்பான இராணுவ மேஜர் ஜெனரல் மனோ பெரேரா பிபிசி தமிழோசையிடம் இன்று வெள்ளியன்று தெரிவித்தார்.

10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாக முன்னர் வெளியாகியிருந்த தகவல்கள் தவறானவை என்றும் அவர் கூறினார்.

கொட்டும் மழைக்கு மத்தியில் பல சவால்களுக்கு கிடையிலேயே மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், மீட்புப் பணியில் 700 வரையிலான இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டிருப்பதுடன், குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்களின் ஒத்துழைப்பையும் பெற்றிருப்பதாகவும் தெரிவித்தார்.

இராணுவத் தளபதியின் பணிப்புரைக்கமைவாக மோப்ப நாய்களையும் பயன்படுத்தி மண்ணில் புதையுண்டவர்களைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

அதேநேரம், இந்த நிலச்சரிவில் 100க்கும் குறைவானவர்களே காணாமல் போயிருப்பதாகப் பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் மூலம் தெரியவந்திருப்பதாகவும் மேஜர் ஜெனரல் மனோ பெரேரா தெரிவித்தார்.

இதேவேளை, இடர் முகாமைத்துவ அமைச்சு வெளியிட்ட அறிக்கையொன்றில் 194 பேர் காணாமல் போயிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

மீரியாபெத்தை பகுதிக்கு இன்று வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சென்று நிலைமைகளை நேரில் கண்டறிந்தார்.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் நடக்கும் மீட்புப் பணிகள் குறித்து எமது பிபிசி செய்தியாளர் மாணிக்கவாசகம் வெள்ளிக்கிழமை அனுப்பிய காணொளி