'நிலச்சரிவில் 38 பேரே அகப்பட்டனர்' - இலங்கை அதிகாரிகள் அதிகாரிகள்

இலங்கையின் பதுளை மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் இறந்தவர்கள் அல்லது காணாமல்போனவர்களின் மொத்த எண்ணிக்கையை இலங்கை அதிகாரிகள் 38 ஆக குறைத்திருக்கிறார்கள்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption 'நிலச்சரிவில் 38 பேரே அகப்பட்டனர்' - அதிகாரிகள்

தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புக்கள் நிலச்சரிவில் அகப்பட்ட நிலையில், அதில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் தம்மிடம் தற்போது இருப்பதாக போலிஸார் கூறியுள்ளனர்.

நிலச்சரிவு ஏற்பட்டு நான்கு நாட்கள் ஆகும் சூழ்நிலையில், தற்போது மீட்புப் பணிகளில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவற்றுக்கு பொறுப்பான இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் மனோ பெரேரா பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமையன்று புதையுண்ட பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

நிலச்சரிவுக்கு பின்னர் இதுவரை மொத்தத்தில் ஆறு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சகதியையும், இடிபாடுகளையும் அகற்றி மோப்ப நாய்களின் உதவியுடன் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் மீட்புப் பணிகள் கடுமையான மழை, மோசமான காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

பலர் தமது குடும்பங்களை மொத்தமாக இழந்திருக்கிறார்கள்.

பல குழந்தைகள் அனாதைகளாகியிருக்கும் நிலையில், அவர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.