அமைச்சரின் மகன் மாலக்க சில்வாவுக்கு பிணை மறுப்பு

படத்தின் காப்புரிமை MALAKA SILVA
Image caption தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் மாலக்க சில்வா மீது இதற்கு முன்னரும் நீதிமன்ற விசாரணைகள் நடந்துள்ளன

இலங்கையின் தலைநகர் கொழும்பில் இரவு களியாட்ட விடுதியொன்றில் வைத்து பிரிட்டிஷ் பிரஜைகளான தம்பதிகளை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள, அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவுக்கு பிணை வழங்குவதை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

குறித்த மோதல் சம்பவத்தில் காயமடைந்துள்ள மாலக்க சில்வா கொழும்பு தேசிய மருத்துவமனையில் கிச்சை பெற்று வருகின்ற காரணத்தினால், அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவில்லை என்று அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹேமந்த வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

இதனிடையே, மாலக்க சில்வாவை அடையாள அணிவகுப்பொன்றில் நிறுத்துவதற்கு உத்தரவிடுமாறு காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இந்த கோரிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்த மாலக்க சில்வாவின் வழக்கறிஞர்கள், சந்தேகநபரின் படங்கள் ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ள காரணத்தினால், அவரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துவதன் முலம் சந்தேக நபருக்கு அநீதி இழைக்கப்படுவதாகத் தெரிவித்தனர்.

எனினும், அந்த வாதத்தை நிராகரித்த நீதவான் மொஹமட் சஹாப்தின், சந்தேகநபரை அடையாள அணிவகுப்பில் நிறுத்துவதற்கு அனுமதி வழங்கினார்.

அவ்வாறே, சந்தேகநபருக்கு பிணை வழங்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையையும் நீதவான் நிராகரித்தார்.

இதன்படி சந்தேகநபரை எதிர்வரும் 11-ம் திகதி வரை விளக்க மறியலில் வைப்பதாகவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த முதலாம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள இரவு களியாட்ட விடுதியொன்றில் பிரித்தானிய பிரஜைகள் இருவரை தாக்கியதாக மாலக்க சில்வா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவ மேஜர் ஒருவரை தாக்கியதாகவும், அதற்கு முன்னர் இரவு களியாட்ட விடுதியொன்றில் கணக்காய்வாளர் ஒருவரைத் தாக்கியதாகவும் மாலக்க சில்வா மீது நீதிமன்ற விசாரணைகள் நடந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தி குறித்து மேலும்