ஐநா மனித உரிமைகள் ஆணையருக்கு இலங்கை காட்டமான பதில்

ஐநா மனித உரிமைகள் ஆணையருக்கு இலங்கை காட்டமான பதில்
Image caption ஐநா மனித உரிமைகள் ஆணையருக்கு இலங்கை காட்டமான பதில்

இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து புலன் விசாரணை செய்யும் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புலனாய்வுக் குழுவின் நடைமுறைசார் அம்சங்கள் குறித்து கேள்வியெழுப்பும் இலங்கையின் உரிமைக்கு சவால் விடுத்ததாக ஐநா மனித உரிமைகள் ஆணையர் ஷெயித் ராத் அல் ஹுசைன் அவர்கள் மீது இலங்கை குற்றஞ்சாட்டியுள்ளது.

ஒரு இறைமையுள்ள நாடு என்ற வகையில் தனது கவலையை வெளியிடும் இலங்கையின் உரிமையை, தனது அறிக்கை மூலம் மனித உரிமைகள் ஆணையர் நிராகரித்துள்ளதாக ஜெனிவாவில் ஐநாவுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க மனித உரிமைகள் ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஐநா முறைமையின் மூத்த அதிகாரியாக இருக்கும் ஒருவர் ஐநாவின் இறைமை மிக்க உறுப்பு நாடு ஒன்றை அளவுக்கு அதிகமான வார்த்தைப் பிரயோகங்கள் மூலம் தாக்கியுள்ளது தமக்கு கவலை தரும் விடயம் என்று இலங்கை தனது கடிதத்தில் கூறியுள்ளது.

ஐநாவின் விசாரணைக்குழுவின் புலன்விசாரணையை அரசாங்கம் நிராகரித்தமையானது தகவல் எதனையும் மறைக்கும் நோக்கில் அல்ல என்றும் இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.

1955 ஆம் ஆண்டு முதல் ஐநாவின் உறுப்பினராக உள்ள ஒரு இறைமை மிக்க நாட்டின் நேர்மையை ஒரு அதிகாரி கேள்விக்குள்ளாக்குவது கவலைக்குரியது என்றும் அந்தக் கடிதத்தில் ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

ஐநாவின் புலன்விசாரணை குறித்து இலங்கையின் வெளியுறவு அமைச்சினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின் சாரத்தையும், உள்ளடக்கத்தையும் புரிந்துகொள்ள முயற்சி எடுக்காமல், ஐநா மனித உரிமைகள் ஆணையரின் செய்தி அறிக்கை வெளியாகியிருப்பது துரதிர்ஷ்டவசமானது என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசாரணைக்குழுவின் நடைமுறைகள் குறித்து இலங்கை எழுப்பிய நியாயமான சந்தேகங்களுக்கு தொழில்சார் ரீதியில் பதிலளிக்க மாத்திரமே ஐநா ஆணையருக்கு முடியுமே ஒழிய நாட்டின் நேர்மைத்தன்மை குறித்து கேள்வியெழுப்ப முடியாது என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.