"ராஜபக்ஷ மூன்றாவது முறை போட்டியிடலாம் என்கிறது உச்சநீதிமன்றம்"

  • 11 நவம்பர் 2014

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு சட்டரீதியாக எவ்விதத் தடையும் இல்லை என இலங்கை உச்சநீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக இலங்கையின் நாடாளுமன்றத்தில் சபாநாயகர் நிமால் சிறிபால டி சில்வா அறிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை gosl
Image caption உச்சநீதிமன்றத்தின் முடிவை நாடாளுமன்றத்தில் சபாநாயகர் அறிவித்தார்.

இலங்கை அரசியல் யாப்பின் 18ஆவது திருத்தத்திற்கு அமைய ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையாக தான் போட்டியிடுவதில் சட்டச் சிக்கல் ஏதும் உள்ளதா என்பதில் ஆலோசனை வழங்குமாறு ஜனாதிபதி ராஜபக்ஷ சில நாட்களுக்கு முன் உச்சநீதிமன்றத்திடம் கேட்டிருந்தார்.

நாட்டின் தலைமை நீதிபதி உட்பட உச்சநீதிமன்றத்தின் பத்து நீதிபதிகள், ஜனாதிபதி ராஜபக்ஷ மறுபடியும் போட்டியிடலாம் என ஏகமனதாக அறிவித்துள்ளதாக சபாநாயகர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தவிர ஜனாதிபதி ராஜபக்ஷ தனது இரண்டாவது பதவிக்காலத்தின் நான்காம் ஆண்டு நிறைவிலேயே அடுத்த ஜனாதிபதி தேர்தலை நடத்துவதிலும் தடையொன்றும் இல்லை என நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

எனவே ஜனாதிபதி மஹிந்த மீண்டும் தேர்தலில் நிற்பது சம்பந்தமாக எழுப்பப்பட்ட சந்தேகங்கள் தீர்க்கப்பட்டுவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அரசியல் யாப்பின் 18ஆவது திருத்தம் அமலுக்கு வந்தபோது ஜனாதிபதி ராஜபக்ஷ ஏற்கனவே தனது இரண்டாவது பதவிக் காலத்தில் இருந்தார் என்பதால் அச்சட்டத்திருத்தைப் பயன்படுத்தி அடுத்த ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிட முடியாது என முன்னாள் தலைமை நீதிபதி சரத் என் சில்வா உட்பட எதிர்தரப்பினர் கூறிவந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையை ஜனாதிபதி ராஜபக்ஷ கோரியிருந்தார்.