யாழ் மாவட்ட வளர்ச்சிக்குழு கூட்டத்தில் மோதல், அடிதடி

  • 16 டிசம்பர் 2014

யாழ் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் தொடர்பான மீளாய்வு கூட்டத்தில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக மாகாண அமைச்சர் உட்பட பலர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

Image caption தாக்குதலுக்கு உள்ளான அமைச்சர் ஐங்கரநேசன்

அந்தக் கூட்டத்தின் இணைத் தலைவர்களில் ஒருவராகிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உரைக்குத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பதிலளிக்க முற்பட்டபோது, இடம்பெற்ற வாக்குவாதத்தையடுத்து, கூட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் மாகாண விவசாயத்துறை அமைச்சர் ஐங்கரநேசனும், வேறு மூன்று மாகாண சபை உறுப்பினர்களும் காயமடைந்துள்ளனர்.

மத்திய அமைச்சர் மீது மாகாண முதல்வர் குற்றச்சாட்டு

அரசதரப்பினரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும் பரஸ்பரம் தண்ணீர்ப் போத்தல் தாக்குதல்களிலும், கைகலப்பிலும் கடும் வாய்த்தர்க்கத்திலும் ஈடுபட்டிருந்ததன் காரணமாக கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டு, கூட்டத்தைத் தலைமை தாங்கி நடத்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு தகுதியில்லை எனக் கூறி கூட்டமைப்பினர் வெளிநடப்பு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது,

Image caption மோதலில் ஈடுபடும் உறுப்பினர்கள்

இது குறித்து செய்தியாளர்களை தமது அலுவலகத்தில் சந்தித்த முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மிகவும் துரதிஷ்டவசமாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் திடீரென்று முடிவுக்கு வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

‘இதற்கான முழு பொறுப்பும் அமைச்சர் டக்ளஸ தேவானந்தாவையும், அவர் வெளியிலிருந்து கூட்டத்திற்குக் கொண்டு வந்த இன்றைய நிகழ்விற்குச் சிறிதேனும் சம்பந்தமில்லாத வெளியாட்களையுமே சாரும்’ என குறிப்பிட்டு, கூட்டத்தில் என்ன நடைபெற்றது என்பது குறித்து விபரிக்கும் அறிக்கையொன்றையும் முதலமைச்சர் வெளியிட்டிருக்கின்றார்.

அமைச்சர் டக்ளஸ் பதில்

இந்தச் சம்பவம் குறித்து தமது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இணைத்தலைவர்கள் உரையாற்றுகையில், பதிலளிக்க வேண்டியதன் காரணமாக இணைத்தலைமை உரையில் சில விடயங்களைக் கடுமையாகக் கூறியதை ஒப்புக்கொண்டிருந்த போதிலும், தலைமையுரைக்கு குறுக்கீடு செய்து குந்தகம் ஏற்படுத்தக் கூடாது என்பதை மீறி உறுப்பினர் சிவாஜிலிங்கம் உரையாற்ற முற்பட்டு கூட்டமைப்பினர் குழப்பத்தை ஏற்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

வெளியாட்கள் எவரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கூட்டமைப்பினரே தமது இணைப்பாளர்கள் மற்றும் பிரதேச சபை தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சுமத்தியிருக்கின்றார்.