'தமிழ் மக்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்' - மாவை

  • 21 டிசம்பர் 2014

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்று முன்னணி தமிழ் கட்சியான, தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.

Image caption 'தமிழ் மக்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்' - மாவை

இந்தத் தேர்தலில், தமிழ் மக்கள் தமது வாக்குகளை நிச்சயமாக பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரான, நாடளுமன்ற உறுப்பினர், மாவை சேனாதிராஜா அவர்கள், இந்த விடயம் தொடர்பில் தமது கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஆகியோருக்கு தாம் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அதேவேளை, தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து தமது கட்சி கிறிஸ்துமஸை அடுத்து வரும் நாட்களில் அறிவிக்கும் என்றும் அவர் பிபிசிக்கு கூறியுள்ளார்.

மாவட்ட வாரியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து மட்ட உறுப்பினர்களையும், தமது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களையும் தாம் சந்தித்து, இந்த விடயங்கள் குறித்து அவர்களது கருத்துக்களை அறிந்து வந்ததாகக் கூறிய மாவை சேனாதிராஜா அவர்கள், உடல் சுகவீனமுற்று இந்தியாவில் சிகிச்சை பெற்றுவரும் தமது அமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் நாடு திரும்பியதும், யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து தமது கட்சி அறிவிக்கும் என்றும் தெரிவித்தார்.