கடும் மழை: 16000 பேர் கிழக்கிலங்கை நலன்புரி முகாம்களில் தஞ்சம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கிலங்கை
Image caption வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கிலங்கை

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்தும் பெய்துவரும் தொடர்மழை மற்றும் தாழ்ந்த பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக ஆயிக்கணக்காண குடும்பங்கள் தமது வாழ்விடங்களைவிட்டு வெளியேறியுள்ளன.

தமது வாழ்விடங்களைவிட்டு வெளியேறியுள்ள குடும்பங்கள் 66 நலன்புரி முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ன.

குறிப்பாக திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள 66 நலன்புரிமுகாம்களில் மட்டும் 4,500 குடும்பங்களை சேர்ந்த 16,000 பேர் தஞ்சமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறுகின்றது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மட்டக்களப்பு மாவட்டத்திலேயே கூடுதலான குடும்பங்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அந்தத் தகவலர்கள் தெரிவிக்கின்றன. இந்த மாவட்டத்தில் மட்டும் 3,000 குடும்பங்களை சேர்ந்த 10,000 பேர் பாடசாலைகள் உட்பட 49 நலன்புரி முகாம்களில் தற்போது தங்கியுள்ளனர்.

இது தவிர, மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த பெருமழை காரணமாக மொத்தம் 65,000 குடும்பங்களைச் சேர்ந்த 2,42,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் பி.எம். எஸ் சார்ள்ஸ் தெரிவித்திருக்கிறார். மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 5,000 வீடுகள் முழுமையாகவும் பகுதியாகவும் சேதமடைந்துள்ளதாகவும் நலன்புரிமுகாம்களில் தங்கியுள்ள குடும்பங்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டிருக்கிறார்.

கடந்த 3 நாட்களாக தொடர்ந்தும் பெய்து வரும் கனமழை காரணமாக இந்த பிரதேசத்து குளங்களும் ஆறுகளும் நிரம்பியுள்ளன.

சிறிய மற்றும் பெரிய நீர்ப்பாசன குளங்கள் உடைப்பெடுப்பதை தடுக்கும் வகையில் குளங்களின் மதகுகளின் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் வீதிகளிலும் நெடுஞ்சாலைகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் தரைவழிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் படகுகள் வழியாகவே போக்குவரத்து நடைபெறுகின்றது.

மட்டக்களப்புக்கும் கொழும்புக்கும் இடையிலான ரயில் சேவைகளும் கடந்த மூன்று நாட்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.