இலங்கைத் தேர்தல் ஏற்பாடுகள் மும்முரம்

  • 7 ஜனவரி 2015
Image caption வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகளுடன் அதிகாரிகள்

இலங்கையில் நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்குபதிவுக்கான வாக்குப் பெட்டிகள், வாக்குச் சீட்டுக்கள் மற்றும் ஆவணங்களுடன் அதிகாரிகள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு இன்று புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

வாக்குச் சாவடிகளில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்படும் காவல்துறையினரும் இவர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

வடமாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மற்றும் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய ஐந்து மாவட்டங்களிலும், ஏழு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றிருப்பதாகத் தேர்தல் திணைக்களம் கூறியிருக்கின்றது.

இந்த மாவட்டங்களில் 955 வாக்களிப்பு நிலையங்களில் இவர்கள் வாக்களிக்கவுள்ளார்கள்.

அளிக்கப்படுகின்ற வாக்குகள் அந்தந்த மாவட்டத்தின் அரச செயலகத்திலும், யாழ்ப்பாணத்தில் மத்திய கல்லூரியில் இதற்கென விசேடமாக அமைக்கப்பட்டுள்ள வாக்குகள் எண்ணும் நிலையங்களுக்கும் வாக்குப் பெட்டிகளில் எடுத்துச் செல்லப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிக்கின்றன.

வவுனியாவில் சிறு ராணுவ சோதனைச்சாவடிகள் அகற்றல்

வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறு சிறு இராணுவ சோதனைச்சாவடிகள், இராணுவ நிலைகள் என்பன தமது கோரிக்கையையடுத்து, மாவட்டத்தின் இராணுவ தளபதியினால் அகற்றப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர பிபிசியிடம் தெரிவித்தார்.

நீதியாக, சுதந்திரமாக இந்தத் தேர்தல் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யபபட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஓமந்தை சோதனைச்சாவடியைப் பற்றி கேட்டபோது, அது தேசிய மட்டத்திலான சோதனைச்சாவடி என்பதனால் அதுபற்றி எதுவும் சொல்வதற்கில்லை என தெரிவித்தார்.

இதேவேளை, புத்தளத்தில் இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம் வாக்காளர்கள் வவுனியா மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடிகளில் வந்து வாக்களிப்பதற்கான போக்குவரத்து வசதிகள் செய்து தரப்பட வேண்டும், என்று தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர் ஒருவரின் பிரதிநிதி என்ற வகையில் ரிசாட் பதியுதீன் கோரியிருந்ததாகவும், இந்த கோரிக்கையை உரிய டநவடிக்கைக்காக தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி இருப்பதாகவும், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தில் இதுவரையில் எந்தவகையான வன்முறைகளோ அல்லது தேர்தல் சம்பந்தமான வன்முறைகளோ இடம்பெறவில்லை என்றும், வாக்களிப்பின்போதும், வாக்களிப்பின் பின்னரும் எந்தவிதமான அசம்பாவிதங்களும் இடம்பெற மாட்டாதென தாங்கள் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொதுமக்கள் வாக்களிக்கச் செல்லும்போதும், வாக்களிக்கும்போதும் தேவையான பாதுகாப்பு வழங்குவதற்காகக் காவல்துறையினர் ஊடாக உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர கூறினார்.