யாழ்ப்பாணத்தில் 'மாசுபடுத்தும்' மின் நிலையத்தை நிறுத்தக்கோரி உண்ணாவிரதம்

Image caption உண்ணாவிரதப் போராட்டம்

யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் இயங்கி வருகின்ற 'நொதேர்ன் பவர்' மின் உற்பத்தி நிறுவனத்தின் செயற்பாட்டை உடனடியாக நிறுத்தக் கோரி யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிலர் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை செவ்வாயன்று ஆரம்பித்திருக்கின்றார்கள்.

பருத்தித்துறை பிரதேசத்தின் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கணேசதாசன் செந்தூரன் அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தப் போராட்டம் சுழற்சி முறையில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

எரிபொருள் மின்சக்தி அமைச்சர் தமது பிரதேசத்திற்கு விஜயம் செய்து நிலைமையை நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் சீராக விநியோகம் செய்யப்படுவதுடன், மாசடைந்துள்ள தமது பிரதேச நிலத்தடி நீரைத் தூய்மைப்படுத்துவதற்கு உரிய பொறிமுறையொன்று செயற்படுத்தப்பட வேண்டும் என்றும் இந்தப் போராட்டத்தில் கோரப்பட்டிருக்கின்றது.

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வரும் திங்கட்கிழமை தொடக்கம் தொடர்ச்சியாக முழு நேரப் போராட்டமாக இதனை நடத்துவதற்குத் தாங்கள் தீர்மானித்திருப்பதாக ஏற்பாட்டாளர்கள் கூறியிருக்கின்றார்கள்.

இதுபற்றி கருத்து வெளியிட்ட டாக்டர் கணேசதாசன் செந்தூரன் ஒரே நீர்ப்படுகையைக் கொண்ட வலிகாமம் பிரதேசம் முழுதும் நிலத்தடி நீர் மாசடையத் தொடங்கியிருப்பதாகவும் யாழ் நகரப்பகுதியும் இதில் அடங்கியிருப்பதாகவும், இதனால் இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படக்கூடிய ஆபத்து உருவாகியிருப்பதாகவும் தெரிவித்தார்.

பிரச்சினைக்குரிய 'நொதேர்ன் பவர்' நிறுவனம் யுத்த காலத்தில் யாழ் மாவட்ட மக்களுக்கு மின் பிறப்பாக்கிகள் மூலமாக மின் உற்பத்தி செய்து விநியோகம் செய்து வந்ததாகவும், இப்போது, தேசிய மின்விநியோக வலையமைப்பின் ஊடாக யாழ் மாவட்டத்திற்குப் போதிய அளவில் மின்சாரம் வழங்கப்படுவதனால் அந்த நிறுவனத்தின் மின் உற்பத்தி அவசியமற்றது என்றும் டாக்டர் செந்தூரன் கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக வடமாகாணசபையினால் துறை சார்ந்த நிபுணர்கள் 9 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாகவும், அந்தக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுப்பதற்கு சபை தயாராக இருப்பதாகவும் வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

இதேவேளை, நிலத்தடி நீர் மாசடைவதற்கும் தமது நிறுவனத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லையென்று நொதேர்ன் பவர் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் லால் பெரேரா அவர்கள் பிபிசி தமிழோசையிடம் மறுப்பு தெரிவித்திருக்கின்றார்.