யாழ் சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்தை மூட உத்தரவு

அமைச்சர் மூட உத்தரவிட்டிருக்கும் மின் உற்பத்தி நிலையம்
Image caption அமைச்சர் மூட உத்தரவிட்டிருக்கும் மின் உற்பத்தி நிலையம்

இலங்கையின் யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் இயங்கி வந்த நார்த்தன்பவர் மின் உற்பத்தி நிறுவனத்தின் செயற்பாடுகள் எரிபொருள் மின்வலு அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் உத்தரவுப்படி நிறுத்தப்பட்டிருப்பதாக சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பின் தலைவியும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாந்தா அபிமன்னசிங்கம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

சுன்னாகத்தில் உள்ள நாதர்ன்பவர் மின் உற்பத்தி நிறுவனத்தினால் வெளியிடப்படும் கழிவு எண்ணெயினால் சுன்னாகம் பிரதேசத்தை மையமாகக் கொண்ட யாழ்ப்பாண நகரம் உள்ளிட்ட நிலத்தடி நீர் வலயப்பிரதேசத்தில் நிலத்தடிநீர் மாசடைந்து, பல இடங்களுக்கும் பரவி வருவதாகவும் அங்குள்ள மக்கள் இதனால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் முறையிடப்பட்டு வந்தது.

நிலத்தடிநீர் மாசுபடுவதனால், இந்தப் பிரதேசத்து மக்கள் சுத்தமான குடிநீர் இன்றியும், ஆரோக்கியம் பாதிக்கப்பட்டும் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாகவும் தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டுவந்தன.

இந்த சுற்றுச்சூழல் பாதிப்புக்குக் மூலகாரணமாக குற்றம் சுமத்தப்படும் நார்தர்ன்பவர் நிறுவனத்தின் செயற்பாட்டை நிறுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்கு நிரந்தரமாகக் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பலரும் கோரி வருகின்றனர். இதை வலியுறுத்தி பல்வேறு ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடத்தப்பட்டு வந்தன.

Image caption யாழ்ப்பாணத்தில் சர்ச்சையில் சிக்கியிருக்கும் மின் உற்பத்தி நிலையம்

இந்த நிலையில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமையத்தின் தலைவியும், ஜனாதிபதி சட்டத்தரணியுமாகிய சாந்த அபிமன்னசிங்கம் தலைமையில் குழுவொன்று எரிபொருள் மின்வலு அமைச்சர் சம்பிக்க ரணவக்கவையும், இடர் முகாமைத்துவ அமைச்சர் அமரதுங்கவையும் இன்று வியாழக்கிழமை கொழும்பில் சந்தித்துப் பேச்சுக்கள் நடத்தியதையடுத்தே, நார்தர்ன்பவர் நிறுவனத்தின் செயற்பாடு எரிபொருள் மின்வலு அமைச்சரின் உத்தரவுக்கமைய நிறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இடர் முகாமைத்துவ அமைச்சருடனான சந்திப்பின்போது பாதிக்கப்பட்ட பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கான குடிநீர் விநியோகம், வைத்தியம் என்பவற்றுடன் மாசடைந்த நிலத்தடி நீரைச் சுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து எடுத்துக் கூறியிருப்பதாகவும் ஆதற்குத் தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அவர் உடன்பட்டிருப்பதாகவும் சாந்தா அபிமன்னசிங்கம் தெரிவித்தார்.

இதேவேளை, நார்தர்ன்பவர் நிறுவனத்தின் செயற்பாட்டை உடனடியாக நிறுத்துமாறு எரிபொருள் மின்வலு அமைச்சர் உத்தரவிட்டிருப்பது குறித்து அந்த நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் லால் பெரேராவைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, அத்தகைய உத்தரவு எதுவும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று பிபிசியிடம் தெரிவித்தார்.