சுன்னாகம் மின் நிலையச் செயல்பாடுகளை நிறுத்த நீதிமன்றம் உத்தரவு

Image caption சுன்னாகம் மின் நிறுவன செயல்பாடுகளை நிறுத்த நீதிமன்றம் உத்தரவு

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் சுன்னாகம் நொதெர்ன் பவர் நிறுவனத்தின் செயற்பாடுகளை மறு அறிவித்தல் வரும் வரை நிறுத்துமாறு மல்லாகம் நீதிமன்றம் செவ்வாயன்று உத்தரவிட்டிருப்பதாக சூழல் பாதுகாப்பு அமையத்தின் தலைவியும் ஜனாதிபதி வழக்கறிஞருமாகிய சாந்தா அபிமன்னசிங்கம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சுன்னாகம் பிரதேசத்தில் கிணற்று நீரில் கழிவு எண்ணெய் கலந்திருப்பது பல கிணறுகளில் அவதானிக்கப்பட்டதையடுத்து, சுன்னாகம் கிழக்குப் பிரதேச மக்கள் சிலர் அங்கு செயற்பட்டு வரும் நொதெர்ன் பவர் நிறுவனத்தின் மின் உற்பத்திச் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் எனக் கோரி மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெயரூபன் ஊடாக வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்கள். இந்த வழக்கில் ஜனாதிபதி வழக்கறிஞர் சாந்தா அபிமன்னசிங்கம் மூத்த வழக்கறிஞராக ஆஜராகியிருந்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளையடுத்து நீதிமன்றம் செவ்வாயன்று மின் உற்பத்தியை மறு அறிவித்தல் வரும் வரை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இந்த உத்தரவு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும், இதனையடுத்து அந்த நிறுவனத்தின் செயற்பாடுகள் நிறுத்தப்படுவதாகவும் சாந்தா அபிமன்னசிங்கம் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக மின்வலு எரிசக்தி அமைச்சரை சாந்தா அப்மன்னசிங்கம் தலைமையிலான சூழல் பாதுகாப்பு அயைமத்தினர் கொழும்பில் கடந்த வாரம் சந்தித்துப் பேச்சுக்கள் நடத்தியபோது, நொதெர்ன் பவர் நிறுவனத்திடமிருந்து மின்சாரத்தைப் பெற வேண்டாம் என்று இலங்கை மின்சார சபையினருக்கு உத்தரவிட்டிருந்தததையடுத்து, அந்த நிறுவனத்தின் செயற்பாடுகள் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்ததாகவும் தற்போது மல்லாகம் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு நொதெர்ன் பவர் நிறுவனத்தின் செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துமாறு வழக்குத் தாக்கல் செய்துள்ள தங்களின் வலுவைக் கூட்டுவதாக அமைந்திருப்பதாகவும் சாந்தா அபிமன்னசிங்கம் கூறியுள்ளார்.

இதற்கிடையில் மின்வலு எரிசக்தி அமைச்சு, இலங்கை மின்சார சபை ஆகியவற்றின் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவொன்று செவ்வாயன்று சுன்னாகம் நொதெர்ன் பவர் நிறுவனத்தைச் சென்று பார்வையிட்டுள்ளது.

அதேநேரம் சூழல் பாதுகாப்பு அமையத்தின் தலைவியும் ஜனாதிபதி சட்டத்ததரணியுமாகிய சாந்தா அபிமன்னசிங்கம் ஆகியோரும் அங்கு சென்று அந்த நிறுவனத்தைப் பார்வையிட்டுள்ளனர்.

அத்துடன் கொழும்பில் இருந்து வருகை தந்திருந்த அதிகாரிகளுடன் இவர்களும் வடமாகாண சபையினால் சுன்னாகம் நிலத்தடி நீர் மாசுறுதல் தொடர்பாக ஆராய்வதற்கென நியமிக்கப்பட்டிருந்த யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தோர் உள்ளிட்ட குழுவினரும் பேச்சுக்கள் நடத்தியிருக்கின்றனர்.