கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு நசீர் அஹமட் பெயர் பரிந்துரை

  • 5 பிப்ரவரி 2015
Image caption கிழக்கு மாகாண விவசாயம், கால்நடை, மீன்பிடி அமைச்சர் நசீர் அஹமட்

இலங்கையில் கிழக்கு மாகாணசபையில் இடம்பெறவுள்ள ஆட்சி மாற்றத்தின்போது முதலமைச்சர் பதவிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் துணைத் தலைவர்களில் ஒருவரான ஹாபிஸ் நசீர் அஹமட்டின் பெயரை முன்மொழிய அக்கட்சி தீர்மானித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து கிழக்கு மாகாணசபைக்குத் தெரிவான ஹாபிஸ் நஸீர் அஹமட், இம்முறை ஆட்சியில் விவசாயம், கால்நடை அபிவிருத்தி மற்றும் மீன்பிடி அமைச்சராக ஏற்கனவே பதவி வகித்துள்ளார்.

கிழக்கு மாகாணசபையின் அடுத்த இரண்டரை ஆண்டு பதவிக் காலத்தில் முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிமொழி வழங்கியுள்ளதாக அக்கட்சியின் தலைவரான ரவூப் ஹக்கீம் அண்மையில் கூறியிருந்தார்.

ஐக்கியக் தேசிய கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவும் தங்களுக்கு கிடைத்துள்ளது என்றும் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாணசபை உறுப்பினர்கள் இன்று வியாழக்கிழமை கொழும்புக்கு அழைக்கப்பட்டு முதலமைச்சர் பதவிக்குரிய பெயர் கட்சியின் தலைவரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை உறுதிப்படுத்திய பெயர் குறிப்பிட விரும்பாத மாகாணசபை உறுப்பினரொருவர், இதற்காக தங்களின் ஆதரவைப் பெறும் உறுதிப் பத்திரங்களைகையளித்துள்ளதாகவும் கூறினார்.

'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடி ஆராயும்'

Image caption கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடுதல் உறுப்பினர்களை கொண்டுள்ளது

இதேவேளை கிழக்கு மாகாண முதலமைச்சராக தமது கட்சியை சேர்ந்தவரே நியமிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக உள்ளது.

இது தொடர்பாக ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் நடத்திய பேச்சுக்கள் தொடர்பாக சாதகமான முடிவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அவர்களிடம் காணப்படுகின்றது.

முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சரின் பெயரை முன்மொழிந்துள்ளமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கருத்துக்கூற மறுத்துவிட்டார்.

இதேவேளை, கிழக்கு மாகாணசபையில் முதலமைச்சர் பதவி தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் எழுந்துள்ள முரண்பாடுகள் தொடர்பாக இணக்கப்பாட்டுக்கு வர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரான பஸீர் சேகு தாவுத் இரண்டு கட்சிகளின் தலைவர்களுக்கும் யோசனையொன்றை முன் வைத்துள்ளார்.

அடுத்த இரண்டரை ஆண்டுக் காலத்தில் முதலமைச்சர் பதவியை, ஒருதரப்பு ஒரு ஆண்டும் மறுதரப்பு ஒன்றரை ஆண்டுகளும் பகிர்ந்துகொள்ள முடியும் என்று பஸீர் சேகு தாவுத் தனது யோசனையில் தெரிவித்துள்ளார்.

பஸீர் சேகு தாவுத்தின் கடிதம் கிடைத்துள்ளமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் உறுதிப்படுத்தினார்.

அவரால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த யோசனை தொடர்பாக நாளை வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் கட்சிகள் கூடி ஆராய்ந்து முடிவு செய்யும் என்றும் அவர் கூறினார்.