வலிகாமம் நிலத்தடி நீர் மாசடைதல்; கொழும்பில் கவனயீர்ப்பு நிகழ்வு

வலிகாமம் நிலத்தடி நீர் மாசடைதல்; கொழும்பில் கவனயீர்ப்பு நிகழ்வு

இலங்கையின் வடக்கே யாழ். மாவட்டத்தில் வலிகாமம் பிரதேசத்தில் நிலத்தடி நீரில் எண்ணெய்க் கழிவு கலந்துவருகின்றமை தொடர்பில் பல்துறை சார்ந்தவர்களும் அக்கறை செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தலைநகர் கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கவனயீர்ப்பு நிகழ்வொன்று நடந்துள்ளது.

'சமூக நலனுக்காக ஒருங்கிணைந்த இளைஞர்கள்' என்ற பெயரில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த இந்த கவனயீர்ப்பு நிகழ்வில் பெருமளவிலான இளைஞர்களும் சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

படக்குறிப்பு,

'வலிகாமல் குடிநீர்ப் பிரச்சனையை ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்துள்ளதாக இளைஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்'

வலிகாமம் குடிநீர்ப் பிரச்சனை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் நடத்தப்பட்ட கருத்தாடல்களின் தொடர்ச்சியாக இந்த கவனயீர்ப்பு நிகழ்வு நடத்தப்பட்டதாக அதன் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான புருஜோத்தமன் தங்கமயில் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

வலிகாமம் பகுதி நிலத்தடி நீரில் எண்ணெய்க் கழிவு கலப்பினால் பாதிக்கப்பட்ட கிணறுகளின் எண்ணிக்கை, பாதிப்பின் அளவு, பாதிப்பின் தன்மை போன்றவை தொடர்பான தகவல்களைப் பொதுமக்கள் பார்வைக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று கவனயீர்ப்பு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.

இது தொடர்பாக, இதுவரை நடத்தப்பட்டுள்ள ஆய்வுகளின் முடிவுகளை சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் உடனடியாக பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் நிலத்தடி நீர் மாசடைவதைத் தடுப்பதற்கும் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுப்பதற்கும் உள்நாட்டு- வெளிநாட்டு நிபுணர்களின் உதவியைப் பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 'சமூக நலனுக்காக ஒருங்கிணைந்த இளைஞர்கள்' கோரியுள்ளனர்.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதி மக்களும் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொள்ளும் அடிப்படை உரிமையை மத்திய அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.