கிழக்கு மாகாண ஆட்சியில் த.தே.கூட்டமைப்பும் இணைந்தது

  • 18 பிப்ரவரி 2015

இலங்கையின் கிழக்கு மாகாணசபையின் புதிய ஆட்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து, அமைச்சுப் பொறுப்புக்களையும் ஏற்பதற்கு முன்வந்துள்ளது.

Image caption கிழக்கு மாகாண ஆட்சியில் த.தே.கூட்டமைப்பும் இணைந்தது

இது தொடர்பாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றும் கிழக்கு மாகாண புதிய முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் முன்னிலையில் ஏற்கனவே கைச்சாத்திடப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையின் அனுமதியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மகாண சபை உறுப்பினர்களுக்கும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பெறுபேறாகவே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் செயலாளர் கி. துரைராஜசிங்கமும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலியும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமைமையகத்தில் வைத்து இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்கள்.

குறித்த ஒப்பந்தத்தின் பிரகாரம் மாகாண அமைச்சர்கள் வாரியத்திலுள்ள ஐந்து அமைச்சுக்களில் இரு அமைச்சுப் பதவிகளை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

மாகாண சபையின் துணை தவிசாளர் பதவியையும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைக்கும் வகையில் இரு தரப்பினருக்குமிடையிலான அந்த ஓப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கான ஆதரவை விலக்கிக் கொண்டதன் காரணமாக கிழக்கு மாகாண சபையில் ஐ. ம. சு. முன்னணி பெருன்பான்மை பலத்தை இழந்திருந்தது.

அந்தநிலையில் கிழக்கு மாகாண சபையில் புதிய ஆட்சியை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து அமைக்க கொள்கையளவில் இணக்கம் கண்டிருந்தனர்.

இருந்த போதிலும் முதலமைச்சர் பதவி தொடர்பான இழுபறி நிலை காரணமாக இரு தரப்பினருக்குமிடையிலான பேச்சுவார்தை தோல்வியில் முடிந்தது.

ஐ.ம. சு. முன்னணியின் தலைவராக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதையடுத்து, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் அந்த முன்னணியுடன் உறவை புதுப்பித்து முதலமைச்சர் பதவியையும் பெற்றுக் கொண்டது.

இந்த விடயத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடந்து கொண்டவிதம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையை பெரும் சீற்றத்திற்குள்ளாக்கியது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையினால் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

பதிலாக அது குறித்து ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை அதிருப்தியையும் வெளியிட்டிருந்தது.

கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவியை தமது கட்சி பொறுப்பேற்ற பின்பு, மாகாண ஆட்சியில் இணைந்து கொள்ளுமாறு, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்ததர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அதனையடுத்து தற்போதைய நகர்வுகள் இடம்பெற்றிருக்கின்றன.