ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இலங்கையின் புதிய இராணுவத் தளபதி கிரிஷாந்த டி சில்வா

  • 20 பிப்ரவரி 2015
Image caption கிரிஷாந்த டி சில்வா முன்னர் கூட்டுப்படைகளின் தளபதியாக பணியாற்றியவர்

இலங்கையின் 21-வது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா நியமிக்கப்படுவதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க வரும் ஞாயிற்றுக்கிழமை ஓய்வுபெறுகின்ற நிலையில், புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா நியமிக்கப்படுகிறார்.

இராணுவத்தில் கடைசியாக கூட்டுப் படைகளின் தளபதியாக பணியாற்றியிருந்த கிரிஷாந்த டி சில்வா, அதன் பின்னர் ரஷ்யாவுக்கான துணைத் தூதராக அனுப்பப்பட்டவர்.

'மேஜர் ஜெனரல் கிரிஷாந்த சில்வா மிகவும் மூத்த அதிகாரி. தற்போதுள்ள இராணுவத் தளபதி தயா ரத்நாயக்கவுக்கு முன்னர் இராணுவத் தளபதி பதவி இவருக்குத் தான் கிடைத்திருக்க வேண்டும். தயா ரத்நாயக்கவை விட கிரிஷாந்த சில்வா தான் அதிக அனுபவம் மிக்கவர். ஆனால், அவருக்கு இராணுவத் தளபதி பதவியை கொடுக்காமல் அவரை ரஷ்யாவுக்கு துணைத் தூதராக அனுப்பியிருந்தனர்' என்றார் இலங்கையின் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான பகுப்பாய்வாளர் இக்பால் அத்தாஸ்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருந்த போது, அதனை நிறுத்திவிட்டு இராணுவத்தின் துணையைக் கொண்டு மகிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் ஆட்சியிலிருக்க முயன்றதாக புதிய அரசாங்கம் குற்றம் சாட்டியிருந்தது.

இப்படியான சதிமுயற்சி நடந்துகொண்டிருந்தபோது, அங்கிருந்தவர்களில் தற்போதைய இராணுவத் தளபதி தயா ரத்நாயக்கவும் ஒருவர் என்று அரசாங்கத் தரப்பை மேற்கோள்காட்டி பரவலான குற்றச்சாட்டுக்கள் இருந்தன.

எனினும், இப்படியான சதிமுயற்சி குறித்த குற்றச்சாட்டுக்களை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மறுத்திருந்தார்.

இந்தப் பின்னணியிலேயே, நாட்டின் இராணுவத் தளபதியை மாற்றி புதிய ஒருவரை அந்தப் பதவிக்கு நியமிப்பதற்கான பேச்சுக்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஈடுபட்டிருந்தனர்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு நெருக்கமான பல மூத்த அதிகாரிகள் கடந்த அரசாங்க காலத்தில் பழிவாங்கப்பட்டதாக சரத் பொன்சேகா உள்ளூர் ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.

புதிய இராணுவத் தளபதி ஒருவரை நியமிப்பது தொடர்பிலும் அவர் புதிய அரசாங்கத்துக்கு பரிந்துரைகளை வழங்கியிருந்தார். '2010-ம் ஆண்டில் ஜெனரல் பொன்சேகாவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் உதவிய காரணத்திற்காக மூத்த அதிகாரிகள் 14 பேரை கட்டாயப்படுத்தி ஓய்வுக்கு அனுப்பினார்கள். அவர்களில் 10 பேரை தற்போது மீளவும் அழைத்து முக்கிய பொறுப்புகளை வழங்க பொன்சேகா உதவியுள்ளார்' என்றார் சண்டே டைம்ஸ் பத்திரிகையின் பாதுகாப்பு விவகாரங்கள் பற்றிய செய்தியாளர் இக்பால் அத்தாஸ்.