திருகோணமலையில் ரகசிய 'கோத்தா முகாம்': ததேகூ கேள்வி

படத்தின் காப்புரிமை AFP
Image caption இறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைந்த, காணாமல்போன, கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களின் நிலைமை என்னவென்று தெரியவில்லை

இலங்கையின் திருகோணமலை கடற்படை முகாமில் 700 பேர் இரகசியமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அந்த முகாம் 'கோத்தா முகாம்' அழைக்கப்பட்டிருந்ததாகவும் கிடைத்த தகவல்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது.

அந்தப் படைத்தளத்தில் 35க்கும் மேற்பட்ட குடும்பங்களும் இரகசியமாக ஒன்றுக்கொன்று தொடர்பின்றியும், வெளியுலகத்திற்குத் தெரியாத வகையிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் உள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

நம்பகமான சிலரிடம் இருந்து கிடைத்த தகவல்களை அடுத்தே, இந்த விடயங்களை நாடாளுமன்றத்தில் தான் வெளிப்படுத்தியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.

'இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் பலர் விடுதலை செய்யப்பட்டிருக்கலாம் அல்லது விடுதலை செய்யப்படாமலும் இருக்கலாம். ஆனால், இத்தகைய முகாம் ஒன்று இருந்ததா, அங்கு அவ்வாறு ஆட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்களா, அவ்வறாயின் அங்கு யார் யாரெல்லாம் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள் என்பதைக் கண்டறிந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்' என்றும் அவர் கூறினார்.

இந்த 700 பேரும் 'கோத்தா முகாம்' என்ற பெயர் கொண்ட ஒரு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக அங்கிருந்தவர்களினால் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது என்றும், அங்கிருந்தவர்களுக்கு ட்ரக் வண்டிகளில் நாளாந்தம் உணவு கொண்டு செல்லப்பட்டதாகவும் தனக்குத் தகவல் கிடைத்திருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

யுத்தம் நடைபெற்ற காலத்தில் கடத்தப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள், அகதி முகாம்களில் இருந்து படையினரால் பிடித்துச் செல்லப்பட்டவர்கள் என 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக காணாமல் போயிருப்பவர்கள் பற்றி விசாரணை செய்யும் குழுவுக்கு மக்கள் சட்டப்படி முறையிட்டிருக்கின்றார்கள்.

'அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அந்தக் குழு இன்னும் கண்டறியவில்லை. அதன் விசாரணைகள் தொடர்பான தகவல்களோ அல்லது இடைக்கால அறிக்கையோ வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் இவ்வாறு 700 பேர் இரகசியமான ஓரிடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள் என்ற தகவலை உண்மையென்றே நான் நம்புகிறேன்' என்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

இந்த விடயம் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக சட்டம்-ஒழுங்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க நாடாளுமன்றத்தில் உறுதியளித்திருப்பதாகவும் பிரேமச்சந்திரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

வியாழனன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது, அதில் அரச தரப்பில் கலந்து கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் ஆகியோரின் கவனத்திற்கும் இந்த விடயத்தைக் கொண்டு வந்துள்ளதாகவும், பிரதமரும் இது குறித்து விசாரணைகள் நடத்துவதாக தமக்கு உறுதியளித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்தப் பிரச்சனை தொடர்பில் அரசாங்கத் தரப்பின் கருத்துக்கள் உடனடியாக கிடைக்கப்பெறவில்லை.