ஐநா அறிக்கை ஒத்திவைப்புக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் ஆர்பாட்டம்

  • 21 பிப்ரவரி 2015
Image caption இலங்கை தொடர்பான ஐநா அறிக்கை செப்டெம்பர் மாத அமர்வுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

இலங்கை தொடர்பான ஐநா அறிக்கை திட்டமிட்டபடி ஐநா மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் காணாமல் போயிருப்பவர்கள் கண்டு பிடிக்கப்பட வேண்டும் என்றும் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இன்று நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் உணர்ச்சிவசப்பட்டவர்களாகக் காணப்பட்ட அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் புகைப்படத்துடன் உருவப் பொம்மை ஒன்றையும் இழுத்துவந்து எரியூட்டியுள்ளனர்.

போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பு இதற்கான அழைப்பை விடுத்திருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள், தமிழரசுக் கட்சியின் உபதலைவர் பேராசிரியர் சிற்றம்பலம் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், காணாமல்போனவர்கள் தொடர்பில் உண்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

தமிழ்த் தலைவர்கள் மீது குற்றச்சாட்டு

படத்தின் காப்புரிமை bbc
Image caption சுமந்திரனின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது

காணாமல்போனவர்கள் தொடர்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணைகளை நடத்தி வருகின்ற ஜனாதிபதி ஆணைக்குழு, தனது விசாரணைகள் குறித்து ஓர் இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

'ஐநா விசாரணை அறிக்கை (இம்முறை) அமர்வில் சமர்ப்பிக்கப்படும் என்று போரினால் பாதிக்கப்பட்ட அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், அரசியல் சதி முயற்சி என சந்தேகிக்கத்தக்க வகையில் அது பிற்போடப்பட்டிருப்பது எங்களுக்கு அதிர்ச்சியூட்டியுள்ளது' என்று இங்கு கருத்து வெளியிட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

காணாமல் போயிருப்பவர்கள் தொடர்பில் தமிழ்த் தலைவர்கள் உரிய முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்றும், ஐநா விசாரணைக்குப் பதிலாக உள்ளக விசாரணை நடைபெறலாம் என்ற கருத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்ததாகவும், அவர்கள் உணர்ச்சி வசப்பட்டிருந்ததைக் கண்டதாகவும் அனந்தி சசிதரன் கூறினார்.

இலங்கையில் நடந்ததாகக் கூறப்படுகின்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்திய ஐநா குழுவின் அறிக்கை ஜெனீவாவில் மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்படும் என்று முன்னர் எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

எனினும், இந்த அறிக்கை வரும் செப்டெம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.