முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸவின் மனைவி கைது

  • 22 பிப்ரவரி 2015
Image caption விமல் வீரவன்ஸ மகிந்த அரசாங்கத்தில் வீடமைப்பு அமைச்சராக பணியாற்றினார்

இலங்கையில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸவின் மனைவி ஷஷி வீரவன்ஸ கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

போலியான ஆவணங்களைக் கொண்டு இராஜதந்திரசேவை கடவுச்சீட்டைபெற்றிருந்த குற்றச்சாட்டிலேயே ஷஷி வீரவன்ஸ கைதாகியுள்ளார்.

2010-ம் ஆண்டில் அவர் பெற்றிருந்த இராஜதந்திர சேவை கடவுச்சீட்டில் உள்ள தகவல்களும் 2009-ம் ஆண்டில் காலாவதியான அவரது சாதாரண கடவுச்சீட்டில் உள்ள தகவல்களும் ஒன்றுக்கொன்று முரண்படுவதாக தெரியவந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பான விசாரணைக்காக வருமாறு குற்றப்புலனாய்வு பிரிவுப் பொலிஸார் ஷஷி வீரவன்ஸவுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

எனினும், அவர் அந்த விசாரணைக்கு சமூகமளிக்காதிருந்த சூழ்நிலையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மாலபே பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஷஷி வீரவன்ஸ கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நாளை திங்கட்கிழமை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.