ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தாயைப் பார்க்க இலங்கை சென்ற பகீரதி தடுப்புக்காவலில்

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து 15 ஆண்டுகளுக்கு முன்னர் விலகியிருந்த முருகேசு பகீரதி என்ற தாய் கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றார்.

2005-ம் ஆண்டில் பிரான்ஸ் சென்றிருந்த பகீரதி, தனது 8 வயது மகளுடன் இலங்கை சென்று கிளிநொச்சியிலுள்ள அவரது பெற்றோருடன் ஒருமாத விடுமுறையை கழித்துவிட்டு, பிரான்ஸ் திரும்பும் வழியிலேயே நேற்று திங்கட்கிழமை கொழும்பு விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 14 நாட்களுக்கு காவல்துறையினர் விளக்கமறியலில் வைத்துள்ளதாக தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பகீரதியின் சகோதரர் முருகேசு வேலவன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகியிருந்த பகீரதி, அதன் பின்னர் அந்த இயக்கத்துடன் தொடர்புபட்டிருக்கவில்லை என்றும் வேலவன் கூறினார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தமது தாயையும் தந்தையையும் பார்த்துச் செல்வதற்காக இலங்கை வந்திருந்தபோதே, பகீரதி கைதுசெய்து தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

பிரான்ஸில் பிறந்த அவரது 8 வயது மகளும் பகீரதியுடன் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் கூறுகின்றனர்.

நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ள நிலையிலும், யுத்தம் இல்லாத சூழ்நிலையிலும் எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாது என்ற நம்பிக்கையிலேயே தனது சகோதரி இலங்கை வந்திருந்ததாகவும் வேலவன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

எனினும், பகீரதி விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த காலத்தில் பல்வேறு தாக்குதல்களை முன்னின்று நடத்தியுள்ளதாகவும் அவருக்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை காவல்துறை கூறியுள்ளது.