இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில்

படத்தின் காப்புரிமை Maithripala Sirisena
Image caption 'பிரிட்டன் வாழ் இலங்கையர்களின் அமைப்புகளின் பிரதிநிதிகளும் மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளனர்'

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டு ஆட்சிமாற்றம் நடந்துள்ள சூழ்நிலையில், அங்கு புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன மூன்றுநாள் அதிகாரபூர்வ பயணமாக பிரிட்டன் வந்துள்ளார்.

எலிசபெத் மகாராணியின் தலைமையின் கீழ் இருக்கின்ற காமன்வெல்த் அமைப்பின் தற்போதைய நிர்வாகத் தலைவரான இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இரண்டாவது வெளிநாட்டு விஜயமாக நேற்று சனிக்கிழமை மாலை லண்டன் வந்தடைந்தார்.

இந்த விஜயத்தின்போது, காமன்வெல்த் அமைப்பின் பிரமுகர்கள் மற்றும் பிரிட்டிஷ் அரச பிரதிநிதிகள் உள்ளிட்ட பலதரப்பட்டவர்களையும் மைத்திரிபால சிறிசேன சந்தித்து பேச்சுநடத்தவுள்ளார்.

காமன்வெல்த் தினத்தை ஒட்டி லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் நாளை திங்கட்கிழமை நடக்கவுள்ள சிறப்பு ஆதானைகளில் இலங்கை ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார்.

அதன்பின்னர் மால்பரோ ஹவுஸ் என்று அழைக்கப்படும் காமன்வெல்த் அமைப்பின் தலைமையகத்தில் நடக்கவுள்ள நிகழ்வுகளிலும் மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்வார் என்று அவரது ஊடகப்பிரிவு இயக்குநர் தர்மசிறி பண்டார பிபிசியிடம் கூறினார்.

நாளை மறுதினம் 10-ம் திகதி பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரனை சந்தித்து பேச்சுநடத்தவுள்ள இலங்கை ஜனாதிபதி இருதரப்பு பிரதிநிதிகள் பலரையும் சந்திக்கவுள்ளார்.

அன்றைய தினமே மாலை, பிரிட்டனில் வாழும் இலங்கையர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகளையும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திக்கவுள்ளதாக அவரது ஊடகப்பிரிவு இயக்குநர் கூறினார்.

இறுதியாக, வரும் 11-ம் திகதி பிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிசபெத் அளிக்கும் இரவு விருந்துபசாரத்திலும் இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஒரு இளமையான காமன்வெல்த் (A Young Commonwealth) என்கின்ற தொனிப்பொருளில் இம்முறை நடக்கும் காமன்வெல்த் தினம், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் இரண்டாவது திங்களன்று இடம்பெறுகின்றமை குறிப்பிடப்படுகின்றது.