19-வது அரசியலமைப்புத் திருத்தம் நாடாளுமன்றத்தில்

படத்தின் காப்புரிமை gosl
Image caption நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதே 19-ம் திருத்தம்

இலங்கை அரசியலமைப்பின் 19வது திருத்தத்துக்கான முன்வரைவு மசோதாவை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்துள்ளார்.

இந்த அரசியலமைப்பு சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு உறுப்பினர்களின் ஆதரவு அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் நிமல் ஸ்ரீபால டி சில்வா கூறியுள்ளார்.

பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு இன்றி அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் என்ற போதிலும், சில பிரிவுகளில் காணப்படும் முரண்பாடுகள் காணப்படுவதாகவும் காரணமாக பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புக்கு அந்த சட்டமூலத்தை அனுமதிக்க வேண்டிய நிலைமை உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

19வது திருத்தச் சட்டத்துடன், ஜனாதிபதித் தேர்தலின்போது வாக்குறுதி அளிக்கப்பட்டவாறு தேர்தல்முறை மறுசீரமைப்புச் சட்டத்தையும் நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நிமல் ஸ்ரீபால டி சில்வா நாடாளுமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.

'பொது வாக்கெடுப்பு'

இதன்போது பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின்றி அரசியலமைப்பின் 19 வது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று கூறியுள்ளார்.

சட்டமூலத்தில் காணப்படும் முரண்பாடுகள் தொடர்பில் உச்சநீதிமன்றத்தின் விளக்கத்தைப் பெறத் தீர்மானித்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் அத்துரலியே ரத்தன தேரர், ஜனாதிபதியும் பிரதமரும் தன்னிச்சையாக உத்தேச அரசியலமைப்புத் திருத்தங்களை கொண்டுவந்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தமது கட்சியினர் முன்வைத்த முக்கிய அம்சங்கள் உத்தேச திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை என்று வருத்தம் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்புத் திருத்தங்கள் மீதான வாசிப்பு நாளை புதன்கிழமை இடம்பெறும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் கூறினார்.

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களைக் குறைத்தல், சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்தல் உள்ளிட்ட சில மறுசீரமைப்புகள் 19வது திருத்தம் மூலம் உத்தேசிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தி குறித்து மேலும்