மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் கொழும்பு மருத்துவமனையில்

  • 2 மே 2015

மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் உடல்நலம் பாதிக்கப்பட்டு கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Image caption தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து மன்னார் ஆயர் குரல் கொடுத்து வந்துள்ளார்

அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்களை மேற்கோள்காட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிபிசியிடம் தெரிவித்தார்.

இலங்கை வந்துள்ள அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரியை சந்திக்கச் சென்றுகொண்டிருந்த போதே அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், உடனடியாக அவர் கொழும்பிலுள்ள தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

அவருக்கு வேண்டிய மருத்துவ சிகிக்சைகளை வழங்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

ஆயர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை மன்னார் ஆயர் இல்லமும் உறுதிப்படுத்தியுள்ளது.

மருத்துவமனையிலுள்ள ஆயரை யாரும் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்றும் மருத்துவமனைக்கு சென்றுவந்த செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.